டெல்லியில் பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு’ போட்டியின் தொடக்க விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தமிழக அரசு கோரியுள்ள வெள்ள நிவாரண தொகையை விரைவாக விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் கிரிக்கெட், ஹாக்கி தவிர்த்து இதர போட்டிகளில் திறன் பெற்றவர்களை கண்டறிந்து பயிற்சி அளிப்பதுடன், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைத்து, பதக்கங்கள் பெறச் செய்யும் விதமாக ‘கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு’ போட்டிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் இப்போட்டிகளை நடத்தும் வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் வரும் 19ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பல்வேறு பிரிவுகளில் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக விளையாட்டு துறை மேற்கொண்டு வருகிறது.
இப்போட்டியின் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3ஆம் திகதி டெல்லி சென்றார்.
பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, ‘கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு’ போட்டிக்கான அழைப்பிதழை பிரதமரிடம் வழங்கி, தொடக்க விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
தமிழக விளையாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்து உதயநிதி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்குமாறு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தேன். தமிழக அரசின் சார்பில், தமிழகத்தில் வெள்ள நிவாரணம், சீரமைப்பு, மறுவாழ்வுக்காக முதல்வர் ஸ்டாலின் கோரிய நிதியை உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தேன். தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக பிரதமரும் உறுதியளித்தார்.
தமிழகத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த விளையாட்டு போட்டிகள் குறித்தும் பிரதமருடன் விவாதித்தேன். தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் குறித்த புத்தகத்தை பிரதமருக்கு வழங்கினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.