கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை
இந்தியா, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய்க்கு இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
ஏற்கனவே சஞ்சய் ராய்க்கு மனநிலை தொடர்பான பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனையில் அதிகாரிகள் கேள்விகளை கேட்கும்பொழுது, குற்றம் சுமத்தப்பட்டவரின் உடலில் ஏற்படும் மாற்றங்களை அதாவது இதயத் துடிப்பு வேகம், சுவாசிப்பதில் சிரமம், வியர்வை, இரத்த அழுத்தம் போன்றவை சோதனைக் கருவியில் பதிவாகும்.
அதற்கு முன்னர் அவரிடம் பொதுவாக சில கேள்விகள் கேட்கப்படும். அப்போது அவரது உடல்நிலையின் இயல்புகள் குறிப்பெடுக்கப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு கேள்விக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் பதிலளிக்கும்போது அவரது உடலியல் மாற்றங்கள் நகரும் காகிதத்தில் குறிப்பாகப் பதிவு செய்யப்படும.
இதுவரையில் சஞ்சய் ராய் கூறிய தகவல்களைக் கொண்டே விசாரணைகள் நகர்ந்தன.
தற்போது இந்தப் பரிசோதனையின் மூலம் அவர் கூறிய தகவல்கள் உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பது கண்டறியப்படும்.
இந்தத் தகவல்களைக் கொண்டு பல வினாக்களுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.