மொட்டுக் கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு: ரணிலுடன் சங்கமித்த மகிந்தவின் சகாக்கள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் உயர் பீடம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு கொழும்பு மலர்வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மொட்டுக்கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
இதில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறாயினும், நேற்று மாலை கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் உயர் பீடம், அந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த முடிவெடுத்திருந்தது.
இந்தத் தீர்மானத்தை எதிர்த்தால், கட்சியின் அனுமதியின்றி ஜனாதிபதித் தேர்தலில் கட்சியைச் சேர்ந்த யாரேனும் போட்டியிட்டால் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எமது ஆதரவு இருக்காது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.