கைவிடப்பட்டு காலியாக கிடக்கும் இலட்சணக்கணக்கான வீடுகள் – காரணம் என்ன?
ஜப்பான் நாட்டில் காலியாக கிடக்கும் வீடுகளால் அரசாங்கம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. ஒரு பெரிய நகரத்தின் மக்கள் தொகைக்கு ஈடாக, ஜப்பானில் கைவிடப்பட்டு கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை இருக்கிறது. பாரம்பரியமாக ’அகியா’ என்று அழைக்கப்படும் வீடுகள்தான் பெரும்பாலும் கைவிடப்பட்டு கிடக்கின்றன.
கிராமப் புறங்களில் மட்டுமின்றி, டோக்கியோ, கியோட்டோ போன்ற முக்கிய நகரங்களிலும் பல வீடுகள் கைவிடப்பட்டு கிடக்கின்றன. ஜப்பானில் பல ஆண்டுகளாக நிலவும் குறைந்த பிறப்பு விகிதமே இதற்கு காரணமாக இருக்கிறது. அதாவது, கடந்த அரை நூற்றாண்டாகவே ஜப்பானில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால், வாரிசு இல்லாதவர்கள் இறந்துவிட்ட பின்னர் அந்த வீடுகள் யாரும் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.
இறந்து போனவர்களால் அவர்களது வீடுகள் காலியாக இருப்பதோடு மட்டுமின்றி, பலர் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று விடுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதன்படி, ஜப்பானில் உள்ள ஒட்டுமொத்த கட்டிடங்களில் 14% குடியிருப்புகள் காலியாக இருக்கின்றன.
வாரிசு இல்லாத வீடுகள் இவ்வாறு கைவிடப்பட்டு, அனாதையாக ஒருபுறம் இருந்தாலும், வாரிசுகள் இருந்தாலும், அவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று கிராமங்களுக்கு வராததும், கிராமப்புறங்களில் பாரம்பரிய வீடுகள் கைவிடப்பட்டு கிடப்பதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.