தேர்தல்கள் அண்மிப்பதால் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டும்; உள்ளீர்த்து செயற்பட த.வி.கூ. தயார்
தமிழில் பேசும் மக்கள் எனும் பொது அடிப்படையில் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டிய தருணம் இதுவென்றும் இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக உள்ளதாகவும் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
எமது நாட்டில் திருப்புமுனையான தேர்தல்கள் பல அண்மித்துள்ள இந்நேரத்தில் தமிழ் பேசும் மக்கள் எனும் ரீதியில் தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டியது எமது கடமையாகுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார். முதலாவது குடியரசு ஆரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு உருவான போது, தமிழர் ஐக்கிய முன்னணி 1974 இல் உதயமாகி பின்னர் 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாறி இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் அனைவரையும் உள்ளீர்த்து செயற்பட்டதோ, அதே விதமாக தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் தற்போதும் ஏற்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கு, அமரர்கள் செல்வா, ஜீ. ஜீ., தொண்டமான் ஆகியோர் ஸ்தாபித்த த. வி. கூ. ஆயத்தமாக உள்ளதாகவும் ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.