அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க நகரங்கள்: காட்டுத்தீ பரவல் – 30 மில்லியன் மக்கள் பாதிப்பு
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா முதல் வடக்கு இடாஹோ வரையிலான நகரங்கள் அடுத்த சில நாட்களில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா, இடாஹோ, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் போன்ற பிரதேசங்களில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.
அதிக வெப்பநிலை காரணமாக 30 மில்லியன் மக்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மத்திய ஓரிகான் மற்றும் வாஷிங்டனின் சில பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் வறண்ட சூழல் காரணமாக காட்டுத்தீ பரவும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
மேலும் கிழக்கு ஓரிகானில் காட்டுத்தீ பரவுவதால் அந்தப் பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவிப்புகளை விடுத்துள்ளனர்.
ஓரிகானில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 10 வீத தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், மாநிலத்தின் வடக்குப் பகுதியில் 116,000 ஏக்கருக்கும் அதிகளவான வனப்பகுதி எரிந்துள்ளதாக ஓஹியோ மாநில ஃபயர் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
புதைபடிவ எரிபொருளால் இயக்கப்படும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் ஆபத்தான வெப்ப அலைகளை உருவாக்குவதற்கு உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
இதனிடையே, கடுமையான வெப்ப நிலையுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள், வெப்ப பக்கவாதம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.