சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்!
இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளில் சரக்கு கப்பல்களை செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஈரான் ஆதரவுடன் ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சரக்கு கப்பலை நோக்கி அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் கூட்டாக பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் லைபீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பார்படோஸ் கொடியுடன் ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில் மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கப்பலை அங்கேயே விட்டுவிட்டு பணியாளர்கள் வெளியேறிவிட்டனர்.
மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் சம்பவம், அதேவேளையில் சர்வதேச கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பொறுப்பற்ற முறையிலான தாக்குதல் என ஏமனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ஐந்து ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதோடு சேர்த்து இரண்டு ஏவுகணைகள் சரக்கு கப்பல்களை தாக்கியுள்ளன. மூன்றில் ஒரு ஏவகணையை அமெரிக்க கப்பல் தாக்கி அழித்துள்ளது.