அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள்

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள்

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இயலுமையை மீறி பெரும் எண்ணிக்கையான சிறைக்கைதிகள் அடைக்கப்படுதல் என்பது வழமையாக இடம்பெற்றுவருவதாகவும், 2018இல் 93 சதவீதமாகக் காணப்பட்ட இவ்வீதம் 2024 இல் 201 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவை சென்று பார்வையிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, அப்பிரிவின் மோசமான நிலை குறித்து அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அப்பதிவில் ‘வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் அதன் இயலுமையை விடவும் பன்மடங்கானோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகள் ஒருவரது தோளுக்குமேல் உறங்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்பிரிவில் உள்ள சிறைக்கைதிகளில் போதைப்பொருள் பாவனையாளர்களும், வயது முதிர்ந்தோரும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றுவதற்கும், புனர்வாழ்வளிக்கப்பட்டோர் மற்றும் நலிவடைந்த நிலையிலுள்ள முதியோரை விடுவிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவின் அப்பதிவை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், பெண் சிறைக்கைதிகள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எரான் விக்ரமரத்ன கருத்து வெளியிட்டிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இயலுமையை மீறி பெரும் எண்ணிக்கையான சிறைக்கைதிகள் அடைக்கப்படுதல் என்பது விதிவிலக்கானது அல்ல எனவும், மாறாக அதுவே இங்கு வழமையாக நடைபெறுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையின் சிறைச்சாலைகளில் இயலுமையை மீறி அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 93 சதவீதமாகக் காணப்பட்டதாகவும், 2024இல் அது 201 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

CATEGORIES
Share This