வடக்கில் காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை
வடமாகாணத்தில் காணப்படும் 60 ஆயிரம் காணி துண்டங்களுக்கு மே 30 ஆம் திகதிக்கு முன்னர் காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”யாழ்.மாவட்டத்தில் 05 வீதத்திற்கும் உட்பட்டதாகவே அரச காணிகள் காணப்படுகின்றன. சாவகச்சேரி, மருதங்கேணி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரச காணிகள் உள்ளன. யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் காணிகள் விஸ்தீரணம் கொண்டதாக இல்லை.
முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை வழங்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலீட்டுக்கு ஏற்ற காணிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக இனம் கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.