நெல்சன் மண்டேலா : சிறையிலும் வாடாத கறுப்பு மலர் !; ஆபிரிக்க வானில் விடிந்த கருஞ்சூரியன் !!
ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ஜீலை 18 நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினத்தையோட்டி
இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது)
எத்தனையோ பல்கலைகழகங்கள் அவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கித் தம்மை சிறப்பித்துக் கொள்கின்றன, ஆனால் அவர் ‘போராட்டமே என் வாழ்க்கை’ என்று பறைசாற்றி விடுதலைப் போர் வீரர் என்ற நிகரிலாப் பட்டத்தை தமதாக்கிக் கொண்டவர்.
போராட்டமே வாழ்க்கை :
உலகின் பல்வேறு நகரங்கள் அவருக்குச் சிறப்புக்குடியுரிமை வழங்கியுள்ளன, ஆனால் அவரது தாய்நாட்டில் எந்த உரிமையும் அவருக்கு இருக்கவில்லை !
உலகெங்கும் எத்தனையோ தெருக்களுக்கு அவரது பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர் சுதந்திர மனிதராய்த் தென்னாபிரிக்கத் தெருவில் நடக்காது, சிறையில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இருந்தார்.
தென்னாபிரிக்க மக்களின் அன்புத்தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளாய் (1989 வரை) சிறையில் கைதியாய் இருந்தார். தென்ஆபிரிக்க வெள்ளை நிறவெறி அரசு அவரை இவ்வளவு நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்துப் புரிந்துள்ள சாதனை அது தான்.
நெல்சன் மண்டேலா என்பது தென்ஆபிரிக் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தின் மறுபெய ராகி விட்டது. அவரது மக்கள் அவருக்குச் சூட்டிள்ள அபிமானப் பெயர் சிறையிலும் வாடாத கறுப்புமலர். ஆண்டுகள் பல ஆன பின்பும் வாடாமற் போராட்ட மணம் வீசிக் கொண்டிருக்கும் ஒரு கறுப்புமலர், சிறையிலும் வாடாத கறுப்பு மலர்.
சரித்திரம் படைத்த உரிமைக்குரல் :
மண்டேலாவின் முழுப் பெயர் ‘நெல்சன் ரோலி ஹாலா மண்டேலா’ 1918 ஜூலை 18 இல் தென்ஆபிரிக்காவின் டிரான்ஸ்காய் பகுதியில் அம்தட்டா எனும் ஊரில் கோசா பழங் குடியினரின் தெம்பு அரச குடும்பத்தில் பிறந்தவர் இவர்.
முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த 1918-ம் ஆண்டில்,உலகிற்கு தனது அழுகுரலைப் பதிவு செய்தது ஒரு குழந்தை. பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் எழுப்பும் சாதாரண அழுகுரல் என்பதால் அது வியப்பதற்கில்லை. ஆனால், அந்த குரல்தான் பின்னாட்களில், தென்னாப்பிரிக்காவின் சரித்திரம் படைத்த உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்தது.
9 வயதில் தன் தந்தையை இழந்த அந்த சிறுவன், ஆடுமேய்த்துக்கொண்டே படிக்கிறான். ‘சோசா’ பழங்குடி இனத்தைச் சேர்ந்த அந்த சிறுவன்தான், அவன் குடும்பத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்றவன். ஒரு கையில் ஆடு மேய்க்கும் குச்சி, இன்னொரு கையில் படிக்கும் பாடப்புத்தகம் என பள்ளிப்பருவத்தைக் கடந்தவனால், அவனது கல்லூரிப்பருவத்தை எளிதாகக் கடக்க முடியவில்லை. காரணம், புறச்சூழல் அவனுக்கு வேறொரு பாடத்தை, வலியக் கற்றுக்கொடுத்தது. அது நிறவெறிகொண்ட வெள்ளையர்களால், பூர்வகுடி கறுப்பின மக்களுக்கு நடத்தப்பட்ட ‘அடிமைப் பாடம்’ !
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
தென்னாபிரிக்காவிற் கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டம் நீண்ட நெடுங்காலமாக நடை பெற்றது.
கறுப்பின மக்களின் உரிமை அடக்கப்பட்டு அடிமைகளாக நடாத்தப்படும் மிகக் கேவல நிலையை நீக்கி 1912 ஜனவரி 8 இல் ஆபிரிக்க, தேசியக் காங் கிரஸ் உதித்தது (A.N.C) இதன் பயனாக கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டம் உத்வேகமானது.
தென்னாப்பிரிக்காவின் பெரும்பான்மையான பூர்வகுடி கருப்பின மக்களை, பிரிட்டிஷ், பிரான்ஸ், டச்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறிய சிறுபான்மை வெள்ளையர்கள் அடிமை செய்து ஆளத்தொடங்கினர்.
தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்கள், தங்கள் தாய்மண்ணிலேயே சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டனர். ஒரே நாட்டுக்குள் பயணிக்க வெள்ளையர்கள் எங்களின் அனுமதியும், பாஸ்போர்ட் உரிமமும் கொண்டிருக்க வேண்டும் எனக் கண்டிக்கப்பட்டனர். உச்சபட்சமாக வாக்களிக்கும் உரிமைகூட பறிக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக நடத்தப்பட்டனர். கொத்தடிமைகளாக சுரங்கப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பல நூறு ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்த கறுப் பின மக்கள் புதிய விடியலை நோக்கிய பாதைக்கு வழி சமைத்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு முழுமையான ஆதரவை வழங்கினர். நிற வெறியை எதிர்த்து மக்களின் போராட்டம் முனைப்படைந்தது.
சுரண்டற்கார, நிறவெறித் தென்னாபிரிக்க அரசு ஆபிரிக்க தேசிய காங்கிரஸை அழிக்க முனைந்தது. ஆயினும் ஒரு சிலரைத்தான் கைது செய்ய முடிந்தது. மக்களின் அமைப்பு மக்களுடனேயே இருந்து போராடியது.
தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.
மகத்தான மக்கள் தலைவன்
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவராக விளங்கிய நெல்சன்மண்டேலா மக்கள் மத்தியிற் பிரபலமானார். எதிரிகள் கூட நெல்சன் மண்டேலாவை மதித்தனர். அன்பால் எதனையும் சாதிக்கக் கூடிய மகத்தான மக்கள் தலைவரானார் மண்டேலா.
நிறவெறி அரசு நெல்சன் மண்டேலாவை அழிப்பதால் கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்கலாம் என எண்ணியது. தேச விரோத வழக்கில் நெல்சன் மண் டேலாவை மாட்டிய அரசு குற்றவாளிக் கூண்டினுள் வைத்து விடுதலைப் போராட்டத்தைப் பேரம் பேசியது.
ஆயினும் சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். இன ஒதுக்கல் அரசின் குற்றவாளிக் கூண்டினுள் நிறுத்தப் பட்டு 27 ஆண்டுகளாக இருட் டுச் சிறைக் குள்ளேயே தன் மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடாத்தினார்.
நான் இன வெறியன் அல்லன்; இன வெறியை அடியோடு வெறுப்பவன். இனவெறி சுறுப்பரிடமிருந்தாலென்ன, வெள்ளையரி மிருந்தாலென்ன, அது அநாகரிகமானது. அருவருக்கத்தக்கது
இத்தனையாண்டு சிறை வாசத்தின் பின்னரும் தன் சுயநலத்துக்காகத் தேச விடுதலைப் ‘போராட்டத்தை நெல்சன் மண்டேலா கைவிடவில்லை. எதற்கும் அஞ்சாத புரட்சிச் சிங்க மாய் நிறவெறி அரசை எதிர்த்தார், குற்றவாளிக் கூண்டினுள் நிறுத்தப்பட்ட நெல்சன் மண்டேலா அரசுக் கெதிராகப் போர்க்கணை தொடுத்தார்.
இனவெறியை முற்றுமுழுதாக எதிர்த்து நின்ற மண்டேலா இருட்குகையான சிறைக்குள் தள்ளப்பட்டார் விடுதலை… விடுதலை… என்ற பெயரில் பேரம் பேசும் நிற வெறியாளர்களுக்கு துளியேனும் மசியது தனது கையில் இலட்சியத்தில் உறுதியாக நின்றார். சிறையிலும் வாடாத கறுப்பு மலர் தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மறந்து மக்களுக்காக தான் போராடு வதையிட்டு மகிழ்ச்சியடைகிறது என அவர் இருட்டுச் சிறையினுள்ளே ஆற்றிய உரையிருந்து காணலாம்.
எனது காலம் திரும்பிவருமானால் இது வரை செய்ததையே மீண்டும் செய்வேன் தன்னை மனிதன் என்று அழைக்கிற எவனும் நிறவெறியருகெதிராகவே செயற்படுவான். எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும், கறுப்பு மலர் விடுதலைப்போராட்ட மணம் வீசிக்கொண்டே இருக்கும்.
1990-ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர்.
தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.
அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008-ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
- ஐங்கரன் விக்கினேஸ்வரா