நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் உமா குமரன்: கிழக்கு லண்டன் மக்க்ளுக்காக போராடுவதாக உறுதி
பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போ தொகுதியின் முதல் உறுப்பினராக நாடாளுமன்றில் பதவியேற்றுள்ளார்.
அவரின் கணவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தனது முதல் நாளிலேயே சத்தியப் பிரமாணம் செய்யும் வாய்ப்பை உமா குமரன் இழந்தார்.
இந்நிலையில், கிழக்கு லண்டனின் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியான ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் உறுப்பினராக நேற்றைய தினம் அவர் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்ற பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இன்று, நான் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் எம்.பி.யாக பதவியேற்றுள்ளேன். எங்கள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவது எனது வாழ்க்கையின் பெருமை ஆகும்.
நான் கிழக்கு லண்டனில் பிறந்தேன், கிழக்கு லண்டனுக்காக போராடுவேன். நாடாளுமன்றில் நான் எப்போதும் உங்கள் குரலாக இருப்பேன். ” என்றார்.
மேலும், அவசர நிலையில் தனது கணவருக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர் சன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உமா குமரனின் பெற்றோர்கள் இலங்கையில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் அமோக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.