மலேசியாவில் உணவகம் அருகே மலைப்பாம்புக் குட்டிகள்!
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், ஷா ஆலமில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே உள்ள வடிகாலுக்குள் மலைப்பாம்புக் குட்டிகளை வழிப்போக்கர் ஒருவர் கண்டதைத் தொடர்ந்து, மலேசியத் தீயணைப்புத் துறை அங்கிருந்த 29 மலைப்பாம்புக் குட்டிகளைக் கைப்பற்றியது.
ஸுலாஃபா உணவகம் அருகே நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 7) பாம்புகள் கண்டறியப்பட்டது குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாக ஷா ஆலம் தீயணைப்பு, மீட்புத் துறை வியாழக்கிழமை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
தீயணைப்பு வாகனம் ஒன்றும் ஆறு தீயணைப்பாளர்களும் இரவு 10 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தீயணைப்புத் துறை செயல்பாட்டுத் தளபதி ரஸியா ஓஸ்மான் கூறினார்.
மொத்தம் 29 மலைப்பாம்புக் குட்டிகள் பிடிபட்டன. அவை 30 செ.மீட்டருக்கும் 50 செ.மீட்டருக்கும் இடைப்பட்டவை.
“அவற்றின் அளவைப் பார்க்கையில், அவை குஞ்சு பொரித்து நீண்டநாள் ஆகவில்லை என நம்புகிறோம்,” என ரஸியா ஓஸ்மான் கூறினார்
மலைப்பாம்புக் குட்டிகள் தூரமான ஓர் இடத்தில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், ஷா ஆலமில் இத்தனை பாம்புகள் பிடிபட்டிருப்பது இது முதன்முறையன்று என்றார்.