பிரபாகரனை எதிர்ப்பவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டம் பாய்கிறது

பிரபாகரனை எதிர்ப்பவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டம் பாய்கிறது

விடுதலைப் புலிகலின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த சமூக செயற்பாட்டாளரே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ஸக்கள் அரச நிதியை மோசடி செய்து அதனை உகண்டாவில் பதுக்கி வைத்திருப்பதாக பொய்யுரைத்து மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டி விட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. சமூக ஊடகங்கள் ஊடாக மக்கள் மத்தியில் அரசியல் கட்டமைப்பை வெறுப்புக்குள்ளாக்கி, பொய்யை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம்.தவறான முறையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தின் கையாட்களாக செயற்படுவதையிட்டு பொலிஸார் வெட்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த சமூக செயற்பாட்டாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.பிரபாகரனை கடவுள் என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கை வரைபடத்தில் தமிழீழத்தை உருவாக்கி மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர் என்றார்.

CATEGORIES
Share This