இந்தியாவால் இலங்கை மீது வற்புறுத்தி திணிக்கப்பட்டதே இந்திய – இலங்கை ஒப்பந்தம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தமானது, இந்தியாவினால் வற்புறுத்தப்பட்டு இலங்கை மீது திணிக்கப்பட்டதாகவும், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சட்டங்கள் பிறிதொரு நாட்டினால் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் இலங்கை சட்டக்கல்லூரியின் அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரஷாந்த லால் டி அல்விஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
IDM Nations Campus இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நுனர்யவ ஐவெநசயெவழையெட கல்வி நிலையத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் சட்டம் தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாடு இன்று திங்கட்கிழமை (02) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே பிரஷாந்த லால் டி அல்விஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச உறவுகளையும், சட்டத்தையும் இணைத்து இலங்கையில் நடாத்தப்படும் முதலாது மாநாடாக இந்த மாநாடு அமைந்திருப்பதாகப் பாராட்டிய அவர், பல்வகை சட்டங்கள் குறித்தும், பிரித்தானியாவிடமிருந்து இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த சட்டங்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து சர்வதேச உறவுகள் என்று வருகிறபோது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தமானது, இந்தியாவினால் வற்புறுத்தப்பட்டு, இலங்கை மீது திணிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், எனவே அதனூடாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தையும் முறையற்ற விதத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் என விமர்சித்தார்.
அதுமாத்திரமன்றி தான் இந்நாட்டின் சகல மாகாணங்களிலும் பணியாற்றியிருப்பதாகவும், மாகாணசபை முறைமையினால் ஒவ்வொரு மாகாணத்திலும் மாறுபட்ட சட்டவிதிகள் நடைமுறையில் இருப்பதாகவும் குறிப்பிட்ட பிரஷாந்த லால் டி அல்விஸ், இவ்வாறானதொரு கட்டமைப்பு இந்தியா போன்ற பரந்துபட்ட நாட்டுக்குப் பொருத்தமானதாக இருப்பினும், இலங்கைக்குப் பொருந்தக்கூடியதல்ல எனவும், அத்தோடு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சட்டங்கள் பிறிதொரு நாட்டினால் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்தார்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை ஓர் சட்டக்கட்டமைப்பென தான் ஒருபோதும் கூறப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், அங்கு அரசியலை மையப்படுத்தியே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது மத்திய கிழக்கு நாடுகள் அதனை எதிர்த்து, இலங்கை ஆதரவாக செயற்பட்டதாகவும், இருப்பினும் இலங்கையில் கட்டாய உடற்தகனம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எதிராகத் திரும்பியதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று ‘இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனடாவின் ஒன்ராரியோவில் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் தீவிர சாதிய வேற்றுமைகள் நிலவுகின்றன. அதன் காரணமாக அவர்கள் இரத்ததானம் கூட செய்யமாட்டார்கள்.
அவ்வேளையில் அவசியமேற்பட்டபோது இராணுவ வீரர்கள் தான் இரத்ததானம் செய்தனர். இதுகுறித்தோ அல்லது சிவனொளிபாதமலை சகல மதங்களைச் சேர்ந்தோராலும் அவர்களது புனித தலமாகக் கருதப்படுவது பற்றியோ, இலங்கை குறித்த இன்னபிற நேர்மறை விடயங்கள் பற்றியோ ஏன் எவரும் பேசுவதில்லை?’ என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரஷாந்த லால் டி அல்விஸ் கேள்வி எழுப்பினார்.
மேலும் இன்றளவிலே நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாகவும், சகலரும் ஒரு தலைவருக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரிவித்த அவர், எனவே இவ்வேளையில் ஓர் உள்ளகப்பொறிமுறையாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.