ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் வாக்கு திரட்டிவரும் இலங்கையின் சிவில் சமூகம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் வாக்கு திரட்டிவரும் இலங்கையின் சிவில் சமூகம்!

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் அதன் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கும் அளிக்கப்பட்டுள்ள ஆணையை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் புதிய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இலங்கையில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் வலியுறுத்திவருவதாக அறியமுடிகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டல், ஆராய்தல், சேமித்தல் ஆகியவற்றுக்கென ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை நீடிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2022 ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 51\1 தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. எனவே இக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் மேலும் காட்டமான புதிய பிரேரணையொன்றை முன்மொழியுமா அல்லது வேறு ஏதேனும் நகர்வுகளை மேற்கொள்ளுமா எனும் பல்தரப்பட்ட கேள்விகள் காணப்படுகின்றன.

இருப்பினும் இலங்கையில் இது தேர்தல் ஆண்டாகையால் புதியதொரு அரசாங்கம் ஆட்சிபீடமேறும் பட்சத்தில், அந்த அரசாங்கம் புதிய தீர்மானத்தை எவ்வாறு அணுகும்? அத்தீர்மானம் அரசாங்கத்துக்கு சுமையாக அமையக்கூடுமா? எனும் கேள்விகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் மத்தியில் காணப்படுவதாகவும், எனவே செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து புதியதொரு பிரேரணையைக் கொண்டுவருவதற்குப் பதிலாக இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த தீர்மானத்தை மேலும் ஒரு வருடகாலத்துக்கு நீடிப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையைச்சேர்ந்த சிவில் சமூகப்பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற புதிய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு உறுப்புநாடுகளிடம் கடிதங்கள் மூலம் கோரிக்கைவிடுத்துவருகின்றனர்.

மேற்கூறப்பட்டவாறு உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதங்களில் இலங்கையில் தொடர்ந்து பதிவாகிவரும் வன்முறை மற்றும் ஒடுக்குமுறைச் சம்பவங்கள், அரச அதிகாரிகளால் நிகழ்த்தப்படும் மீறல்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் நிலவும் பின்னடைவு, வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாமை, நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.

அத்தோடு இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் அதன் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கும் அளிக்கப்பட்டுள்ள ஆணையை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் புதிய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அக்கடிதங்களில் உறுப்புநாடுகளிடம் கோரப்பட்டிருக்கின்றது.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு ஏதுவான நடைமுறைச்சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறும் அதில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

CATEGORIES
Share This