Update – வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா: இயல்புநிலைக்கு திரும்பியது சாவகச்சேரி வைத்தியசாலை

Update – வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா: இயல்புநிலைக்கு திரும்பியது சாவகச்சேரி வைத்தியசாலை

சாவகச்சேரி வைத்தியசாலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ராஜீவ் தொடர்ந்தும் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருடன் இடம்பெற்ற நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் வைத்தியர் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்த வைத்தியர் அர்ச்சுனா

சாவகச்சேரி வைத்தியசாலையில் அத்தியட்சகர் யார்? என்பது தொடர்பில் நீண்ட விவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் அத்தியட்சகர் கடந்த மாதம் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டிருந்தார்.

தான் பதவியேற்றப் பின்னர் வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் அவ் வைத்தியசாலையில் பணியாற்றிய ஏனைய வைத்தியர்கள் அவருக்கு எதிராக திரும்பியதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

07ஆம் திகதி இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் மறுநாள் 08ஆம் திகதி அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் நீடித்திருந்தது.

நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறையில் தான் செல்வதாகவும் மீண்டும் வருவேன் எனவும் கூறிச் சென்றார்.

இதனையடுத்து கடந்த ஒன்பதாம் திகதி வடமாகாண சுகாதார திணைக்களத்தால், வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளார். பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால், பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பதில் அத்தியட்சகராக அமைச்சு அனுமதியுடன் வடக்கு திணைக்களம் நியமித்திருக்கிற போதிலும் வைத்தியர் அர்ச்சனாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட எந்த ஒரு கடிதமும் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனாவும் அவ்வாறுதான் கூறுகிறார்.

இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் அத்துமீறி காணொளி எடுக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
Share This