தேர்தலை பிற்போட அரசாங்கம் சதி: சுமந்திரன் குற்றச்சாட்டு

தேர்தலை பிற்போட அரசாங்கம் சதி: சுமந்திரன் குற்றச்சாட்டு

தேர்தலை பிற்போட அரசாங்கம் சதி செய்கிறது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும், கட்சி சம்மந்தமான வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்பினரும் ஒன்றாக கூடி அடுத்த தவணை 19 ஆம் திகதி வழக்கு வரவிருக்கின்ற காரணத்தினால் அது குறித்து உரையாடப்பட்டது.

நாங்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலைப்பாட்டுக்கு அமைய மறுமொழிகளை தாக்கல் செய்த பிறகு வழக்கை முடிவுறுத்துவதற்கான ஒரு யோசனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த யோசனையின் விபரங்கள் நாங்கள் மத்திய செயற்குழுவில் கூடி தீர்மானிப்போம்.

ஆனால் பொதுவாக வழக்கை எந்த அடிப்படையில் முடிவுறுத்தலாம் என இணங்கப்பட்டிருக்கிறது. முன்னேற்றகரமான செயற்பாடு கலந்துரையாடலில் இடம்பெற்றது.

8 எதிராளிகளையும் 19 ஆம் திகதி வழக்கில் அழைப்பார்கள். கடைசியாக இடையீட்டு மனுவை முன்வைத்த ஜீவராஜா என்பவருடைய இடையீட்டு மனு தொடர்பான விடயமும் 19 ஆம் திகதி இருக்கிறது.

அதனால் வழக்கு தள்ளிப் போகக் கூடிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

ஆனால் அதை தவிர நாங்கள் அனைவரும் மறுமொழி அணைத்து, இப்பொழுது குடியியல் நடவடிக்கைகள் சட்ட மூலத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் அமைவாக வழக்கு விளக்கத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக சட்டத்தரணிகள் சகிதம் நீதிபதியோடு ஒரு கலந்துரையாடல் நடத்தப்படவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் தான் வழக்கை சுமுகமாக தீர்க்கக கூடிய வழிகள் என்ன என்பதை நீதிபதியோடு இணைந்து பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் சட்டப்படியாக இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.

19 ஆம் திகதி மறுமொழி வழங்கிய பின்னர் ஒரு திகதியை தீர்மானித்து கலந்துரையாடலை மேற்கொண்டு வழக்கை என்ன மாதிரி முடிவுறுத்தலாம் என்ற தீர்மானத்திற்கு வரலாம்.

அதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூடி எடுக்கப் போகும் தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடி இணக்கப்பாட்டை தெரிவிக்கும்.

அத்தோடு, வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தினால் தமிழரசுக் கட்சி செயற்பட முடியாமல் இருகிறது. நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கிறது.

கட்சியினுடைய சின்னத்தை பாவிக்க முடியாமல் இருக்கிறது. தேர்தல் வந்தால் என்ன செய்வார்கள். என்றெல்லாம் பலர் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற விடயம் நடந்து கொண்டிருகிறது. இதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இதனை ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்துமாறும் என்னை பணித்தும் இருக்கிறார்கள்.

கட்சி முடக்கபட்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள் எதுவும் முடங்கவில்லை. கட்சியின் சின்னம் முடக்கப்படவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக் கொண்டே இருகிறது.

கட்சியின் சின்னத்தின் கீழ் எந்த தேர்தலையும் நாம் சந்திக்க முடியும். அதற்கு எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையாது. ஆகவே இதை தெரிந்து கொண்டே சிலர் வேணும் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள்.

அதனால் தான் இந்த தெளிவுபடுத்தலை செய்கின்றோம். வழக்கில் நிறுத்தப்பட்டிருப்பது கட்சியின் தெரிவுகள். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தெரிவுகள் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒரு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அதனுடைய பிரதிபலன் என்னவென்றால் அதற்கு முன்னிருந்த தலைவர், செயலாளர், நிர்வாகிகள் கட்சியினுடையய செயற்பாட்டை முன்னெடுக்க முடியும். அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது.

இலங்கை தமிழரசுக் கட்சி உயிர்போடு இருப்பதுடன் ஒரு ஆக்கபூர்வமான பிரதிநிதிகளுடன் தொட்ர்ந்தும் பயணிக்கிறது. எதிர்வரும் எந்த தேர்தலில் கட்சி போட்டியிடும்.

மக்களுக்கான தனது செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கும். பாராளுமன்ற குழுதத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை.

அது தொடர்பில் எமது கட்சியின் அரசியல் குழு இணைய வழி ஊடாக ஒரு தடவை கலந்துரையாடியது. மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுப்போம்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனுவை சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்யதுள்ளார். அது மூன்று நீதியரசர்கள் முன்பாக விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே கடந்த திங்கள் கிழமையும் அப்படியான மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

5 நீதியரசர்கள் குழு முன்னிலையில் நடந்தது. அந்த வழக்கில் நானும் ஆஜராகினேன். அது அடிப்படையில்லாத மனு என்ன தெரிவித்து அதனை தாக்கல் செய்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழக்கு செலவும் செலுத்தும் படி உத்தரவிடப்பட்டது.

வழக்கு நிலுவையில் உள்ள போது அதனை பற்றி பேசக்கூடாது.

அரசாங்கம் தேர்தலை பிற்போட முனைப்பு காட்டுகிறது என்பதை அரசியலமைப்பில் 83 பி என்கின்ற உறுப்புரையை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி கொடுத்ததில் இருந்தே தெரிகிறது. அதைப் பற்றி விளக்கமாகவும் விபரமாகவும் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன்.

தேவையில்லாத ஒரு திருத்தத்தை வேண்டுமென்றே கொண்டு வந்து மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை பிற்போடுவதற்கான ஒரு சதி செய்யப்படுவதாகவும் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This