மக்கள் கோரும் மாற்றத்துக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சியை அடையாளம் காண்போம் – ‘மார்ச் 12’ இயக்கம்

மக்கள் கோரும் மாற்றத்துக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சியை அடையாளம் காண்போம் – ‘மார்ச் 12’ இயக்கம்

அண்மையில் மக்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றைக் கோரினார்கள். அம்மாற்றத்துக்கு எந்தக் கட்சி உண்மையிலேயே ஆதரவளிக்கிறது என்பதை அடையாளம் காண்பதில் நாம் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறோம். அத்தோடு ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கென அரசாங்கத்துக்குச் சர்வதேச சமூகம் நிதி மற்றும் ஏனைய வள உதவிகளை வழங்கியுள்ளது. இருப்பினும் வரி அதிகரிப்பு வேகத்துடன் ஒப்பிடுகையில் இம்மறுசீரமைப்புக்கள் மந்தகதியிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன என ‘மார்ச் 12’ இயக்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதனைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும், இவ்விடயத்தில் நீதிமன்றத்தின் தீர்மானம் பற்றியும் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ‘மார்ச் 12’ இயக்கத்தினால் இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் ‘மார்ச் 12’ இயக்கத்தின் பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட முக்கிய கருத்துக்கள் வருமாறு:

ரோஹன ஹெட்டியாராச்சி

இச்சந்திப்பில் கருத்துரைத்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், ‘மார்ச் 12’ இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி, ‘தற்போது ஜனாதிபதித்தேர்தலை நடத்துவதற்கான தளம் வெற்றிடமாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பது உறுதியாகியுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், தேர்தலை நடத்துவது குறித்து அரச அச்சகத்திணைக்களம், பொலிஸ், அஞ்சல் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட கட்டமைப்புக்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே கலந்துரையாடல்களை முன்னெடுத்திருக்கிறது’ எனச் சுட்டிக்காட்டினார்.

எதுஎவ்வாறிருப்பினும் ஆட்சியதிகாரம் மற்றும் பொதுநிதி என்பன தனியொரு வேட்பாளருக்குச் சாதகமாக மாத்திரம் பயன்படுத்தப்படும் சில சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. அரச இயந்திரமானது அரசியல் பிரசாரத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும். இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு என்பதுடன், உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் பிற்போடப்பட்டாலும் உள்ளுராட்சி தேர்தல்கள் சட்டம் இன்னமும் இயங்கு நிலையிலேயே இருக்கின்றது. அதேபோன்று புதிதாகக் கொண்டுவரப்பட்ட தேர்தல் பிரசாரங்களுக்கான செலவினங்கள் தொடர்பான சட்டத்தை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே நடைமுறைப்படுத்தமுடியும். இருப்பினும் சில கட்சிகள் தேர்தலுக்கான அவர்களது நிதி ஒதுக்கீட்டில் அரைவாசியை ஏற்கனவே பிரசாரங்களுக்காக செலவிட்டுள்ளனர். இது குறித்த சட்டம் தேர்தல்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னரேனும் நடைமுறைப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தைக் காண்பிக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் அநாவசியமான தாமதப்படுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் அதிகாரத்துக்கமைய தேர்தல் திகதியை அறிவிக்கவேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தினார்.

நதிஷானி பெரேரா

அதேபோன்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், ‘மார்ச் 12’ இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளருமான நதிஷானி பெரேரா கூறியதாவது:

அண்மையில் மக்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றைக் கோரினார்கள். அம்மாற்றத்துக்கு எந்தக் கட்சி உண்மையிலேயே ஆதரவளிக்கிறது என்பதை அடையாளம்காண்பதில் நாம் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறோம். அத்தோடு ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கென அரசாங்கத்துக்குச் சர்வதேச சமூகம் நிதி மற்றும் ஏனைய வள உதவிகளை வழங்கியுள்ளது. இருப்பினும் வரி அதிகரிப்பு வேகத்துடன் ஒப்பிடுகையில் இம்மறுசீரமைப்புக்கள் மந்தகதியிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேலும் அரச ஊழியர்கள் அரசியல் பிரசாரங்களில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டும். ஏனெனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்களை மீட்பதற்கு எந்தவொரு அரசியல்வாதியும் முன்வரப்போவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்’ என்றார்.

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

‘ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு தேர்தல் திகதி தொடர்பில் இடம்பெற்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இயங்கு நிலையில் உள்ள ஜனநாயகத்தில் தெரிவு மற்றும் வாய்ப்பு என்பவற்றை உறுதிசெய்வதற்கு தேர்தல்கள் இன்றியமையாதவையாகும். ‘அரகலய’ போராட்டத்தின் பின்னர் மக்கள் மத்தியில் ஜனநாயகம் மற்றும் ஆட்சி நிர்வாகம் என்பன மீதான அக்கறை அதிகரித்துள்ளது. எனவே அந்த நம்பிக்கையை உறுதிசெய்வது நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அவசியமாகும்’ என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

CATEGORIES
Share This