தேசிய மக்கள் சக்தியே போதைப் பொருளை ஒழிக்கக்கூடிய ஒரே அரசாங்கம்
நாட்டில் பாரிய விளைவுகளை உருவாக்கியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இல்லாதொழிக்கும் என NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் நடைபெறுவதாக தெரிவித்தார்.
“நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு அரசியல்வாதிகள் பின்னால் உள்ளனர். சமீபத்தில் பல அரசியல்வாதிகள் தங்கள் ஜீப்பில் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை கொண்டு செல்லும் போது பிடிபட்டனர்,” என்று அவர் கூறினார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு சிறுவர்கள் பலியாகிவிட்டதாகத் தெரிவித்த திஸாநாயக்க, குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகும்போது முழு குடும்பமும் துயரத்தில் விழுவதாகக் கூறினார்.
“இந்த அனுராதபுர புனித நகரம் கடந்த காலங்களில் மிகவும் அமைதியாக இருந்தது, அங்கு யாரும் பயமின்றி வந்து நாட்களை கழித்து மகிழலாம். நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்து பலநாட்கள் தங்கினோம், இப்போது நகரில் போதைப்பொருள் அதிகமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
NPP யாருக்கும் பயப்படவும் இல்லை, கடனாளியாகவும் இல்லை என்று கூறிய அவர், NPP மட்டுமே போதைப்பொருளை ஒழிக்கக்கூடிய ஒரே அரசாங்கம் என்றும் கூறினார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் சுதந்திரத்தை பொலிஸாருக்கு NPP வழங்கும் என்று கூறிய திஸாநாயக்க, அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நீக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.