2022- 2024 வரையான காலப்பகுதி: இலங்கை வரலாற்றில் பதியப்படும்

2022- 2024 வரையான காலப்பகுதி: இலங்கை வரலாற்றில் பதியப்படும்

இலங்கையில் அதிகளவில் சட்டம் தயாரிக்கப்பட்ட ஆண்டுகளாக 2022- 2024 வரையான காலப்பகுதி வரலாற்றில் பதியப்படுமென, நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு முதல் 59 சட்டச் சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, 7 சட்டமூலங்களும் 44 திருத்தச் சட்டங்களும் எதிர்வரும் நாட்களில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அமைச்சுக்களினதும் சட்டங்களைத் தயாரிப்பதில் நீதி அமைச்சு பெரும் பங்காற்றுவதாகவும், 2022 ஆம் ஆண்டில் 273 சட்ட வரைவுகளும், 2023 ஆம் ஆண்டில் 299 சட்ட வரைவுகளும் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

“நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தக் காலப்பகுதி வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டியதாகும்.

எமது அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைய, 2022 இல் – 29, 2023 இல் – 17, 2024 இல் – 13 என இதுவரை 59 சட்டச் சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 7 வரைவுகள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இன்னும் 44 மிக முக்கியமான சட்டத் திருத்தங்களுக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளன. ஒவ்வொரு அமைச்சின் சட்டங்களை வகுப்பதிலிலும் நீதி அமைச்சு பெரும் பங்காற்றுகிறது.

அதன்படி, சட்ட வரைவுத் திணைக்களம், மற்றைய அமைச்சுக்களுக்காக 2022 ஆம் ஆண்டில் 273 சட்ட வரைவுகளையும், 2023ஆம் ஆண்டில் 299 சட்ட வரைவுகளையும் மும்மொழிகளிலும் தயாரித்துள்ளது.

நீதித்துறையை செயற்திறன் மிக்கதாக மாற்றுவதன் மூலம் மக்கள் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய முடியும். வழக்கு தொடர்பான சொத்துக்களை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

மேலும் நல்ல முதலீட்டுச் சூழல் உருவாகி வருகிறது. எனவே, சட்டத்தின் தாமதத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருப்பது தெளிவாகிறது.

2017 ஆம் ஆண்டில் சட்ட விவகாரங்களுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு வழங்கிய அறிக்கையின்படி, ஒரு குற்றவியல் வழக்கை முடிக்க பொதுவாக 17 ஆண்டுகள் ஆகும். பல்வேறு ஆய்வுகளின்படி, ஒரு நிலம், பகிர்வு மற்றும் கணக்கீட்டு வழக்கை முடிக்க ஒரு தலைமுறைக்கு மேல் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றுவதற்கு தேவையான செயற்பாடுகளைத் திட்டமிட்டுள்ளோம்.

அதற்கான முக்கிய தீர்வாக நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டியுள்ளது. அதேபோல் மேலும் பல மாற்றங்களும் அவசியப்படுகின்றன. அதற்கான ஏற்பாடுகள் பல தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன.

42 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துடன், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க முடிந்துள்ளது.

கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக 76 நீதித்துறை அதிகாரிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு தடவைகளில் 34 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதன் காரணமாக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய நீதிமன்றங்களை நிர்மாணிக்கவும் முடிந்தது.

இந்த காலகட்டத்தில், உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை அறைகளின் எண்ணிக்கை 3 இலிருந்து 5 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிமன்ற அறைகளின் எண்ணிக்கை 5 இலிருந்து 10 ஆகவும் அதிகரிக்கப்பட்டன. மேலும், உயர் நீதிமன்றம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளமை சட்டத்தரணிகள் மற்றும் மக்களுக்கு பயனளிப்பதாக அமைந்துள்ளது.” என்றும் எம். என். ரணசிங்க மேலும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This