பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தமா ? – ஒருபோதும் ஏற்கோம் என்கிறது இலங்கைத் தமிழரசுக்கட்சி
பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதை முற்றாக நிராகரிப்பதாகவும், அது ஒருபோதும் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் அவருக்குப் பாரிய பின்னடைவையே தேடித்தரும் எனத் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வைக் கோரியதாகவும், தற்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி, மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட வேறு பல அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை (07) இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் ஜனாதிபதியின் இக்கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி நடைமுறைப்படுத்துவது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக அமையாது எனச் சுட்டிக்காட்டினார்.
‘சம்பந்தன் பிளவுபடாத, ஒருமித்த இலங்கைக்குள் அரசியல் தீர்வினைக் கோரியதாக ஜனாதிபதி கூறுகின்றார். இருப்பினும் அவர் பிளவுபடாத இலங்கைக்குள் தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்கக்கூடிய, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வையே கோரினார்.
மாறாக அவர் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை. அவ்வாறிருக்கையில் பொலிஸ் அதிகாரங்களின்றி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி கூறுகின்றார். அது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வாக ஒருபோதும் அமையாது.
எனவே உரையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்’ எனவும் சிறிதரன் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி ஏற்கனவே மாகாணங்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், எனவே மேலும் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதை கிஞ்சித்தும் ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து, சுயநிர்ண உரிமையை உறுதிசெய்யக்கூடிய விதத்தில், சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து இதயசுத்தியுடன் பேசுவதற்கு ஜனாதிபதி எம்மை அழைத்தால், அப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு தமிழரசுக்கட்சி தயாராக இருக்கின்றது எனவும் சிறிதரன் கூறினார்.
அத்தோடு ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் ஜனாதிபதி ஆற்றிய உரை தமிழ்மக்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் எனவும், அது எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.