பொறுப்புக் கூறலுக்கு ஆதரவளிக்க வேண்டும்

பொறுப்புக் கூறலுக்கு ஆதரவளிக்க வேண்டும்

பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் பொறுப்புக் கூறல் திட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், காணாமல்போனவர்கள் அலுவலகத்தை மாற்றுங்கள் என கேட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்,நாட்டின் பல மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காணவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ( நவம்பர் 18) சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கை ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கும் சமீபத்தைய நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் கட்சியின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.

நீங்கள் கடும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளீர்கள் என நாங்கள் கருதுகின்றோம்.

உங்களது நடவடிக்கைகள் செயற்பாடுகள் , இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் எதிர்வரும் பல வருடங்களிற்கு தாக்கத்தினை செலுத்தப்போகின்றன.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் என்பது உலகின் 90க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றும்,சுயாதீனமான அரசசார்பற்ற அமைப்பாகும்.

1980கள் முதல் இலங்கையில் பலவந்தமாக காணாமல் செய்யப்படுதல்,உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடு முழுவதும் பணியாற்றியுள்ளோம்.

மேலும் 1983 முதல் 2009 வரையான உள்நாட்டு யுத்தத்தில் அனைத்துதரப்பினரும் இழைத்த துஸ்பிரயோகங்கள்,தற்போதைய பொருளாதார நெருக்கடி பொருளாதார சமூக உரிமைகளில் செலுத்தியுள்ள தாக்கம் போன்ற விடயங்களையும் நாங்கள் கையாண்டுள்ளோம்.

CATEGORIES
Share This