திருமலையில் அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்: உணர்வெழுச்சியுடன் பிரியாவிடை; ரணில், அண்ணாமலை உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்பு

திருமலையில் அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்: உணர்வெழுச்சியுடன் பிரியாவிடை; ரணில், அண்ணாமலை உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை உட்பட ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியுடன் இறுதிமரியாதை அளிக்கப்பட்டு அக்கினியுடன் சங்கமித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 91வயதில் இயற்கை எய்திய இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி சமயக்கிரியைகள், இலக்கம் 115, அஞ்சல் நிலைய வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நேற்றுக்காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் ஒரு மணியளவில் நிறைவு பெற்றன.

அதனைத்தொடர்ந்து இலங்கையின் இராஜதந்திரிகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பிற்பகல் இரண்டு மணிக்கு விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் அஞ்சலி உரைகள் ஆரம்பமாகின. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக லக்ஷ்மன் கிரியெல்ல, பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி., புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி., தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, மாவைசேனாதிராஜா ஆகியோர் உரையாற்றினர். மாலை 3.30 மணிக்கு அஞ்சலி உரைகள் நிறைவு செய்யப்பட்டு, தொடர்ந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

அஞ்சல் நிலைய வீதி, மின்சார நிலைய வீதி ஊடாக கிறீன் வீதிச் சந்தியை அடைந்து, அங்கிருந்து கல்லூரி வீதிக்கு சென்று, மீண்டும் சோனகர் தெரு ஊடாக இராஜவரோதயம் வீதியை அடைந்து, பின்னர் பிரதான வீதிக்குச் சென்று, அங்கிருந்து கடற்காட்சி வீதி ஊடாக ஏகாம்பரம் வீதிக்கு சென்று இறுதியாக திருகோணமலை இந்து மயானத்தை அடைந்தது.

அன்னாரின் இறுதி ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மற்றும் பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் என்பனவற்றில் பூதவுடலுக்கு விசேட அஞ்சலியை செலுத்தப்பட்டது. இறுதி ஊர்வலம் செல்லவுள்ள வீதிகளில் உள்ள மக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அங்கு அன்னாரின் மூத்த மகன் சம்பந்தன் சஞ்ஜீவன் சிதைக்குத் தீ மூட்டியதோடு இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது.

CATEGORIES
Share This