‘என்னை போட்டியிலிருந்து வெளியேற்ற கடவுளால் மட்டுமே முடியும் – ஜோ பைடன்

‘என்னை போட்டியிலிருந்து வெளியேற்ற கடவுளால் மட்டுமே முடியும் – ஜோ பைடன்

” டிரம்ப் உடனான விவாதத்தின் போது, எனக்கு உடல்நிலை சரியில்லை; கடும் சோர்வாக இருந்ததால், விவாதத்தில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. தேர்தலில் இருந்து வெளியேறு என கடவுள் கூறினால் மட்டுமே போட்டியிலிருந்து வெளியேறுவேன்,” என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், வரும் நவம்பரில் நடக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், 81, போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 78, களம் காண்கிறார்.

கடந்த ஜூன் 27ம் தேதி, அட்லாண்டாவில், ஜனாதிபதி பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி நடந்தது.

இதில் இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டினர். டிரம்ப் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ஜோ பைடன் திணறினார்.
இதையடுத்து,ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து ஜோ பைடனை மாற்ற வேண்டும் என, அவரது சொந்தக் கட்சியினரே குரல் கொடுத்தனர்.

எனினும், ஜோ பைடனுக்கு பெரும்பாலான ஆதரவு இருப்பதால், அவர் தேர்தலில் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டது.
டிரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்துக்கு பின், முதன்முறையாக, ஏ.பி.சி., நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதிஜோ பைடன் கூறியதாவது:
டிரம்ப் உடனான விவாதத்தின் போது, எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் மிகவும் சோர்வாக இருந்தேன். மேலும், எனக்கு சளி பிடித்திருந்தது.
இதனால், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து, பரிசோதனை செய்தனர். அன்றைய தினம், ஒரு மோசமான இரவாக இருந்தது. என் உள்ளுணர்வை நான் கேட்கவில்லை.
விவாதத்தில் சரியாக செயல்படாததற்கு நான் தான் காரணம். இதில் யாரையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஜனநாயக கட்சியில் எனக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

பெரும்பாலான தலைவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஜனாதிபதி போட்டியில் இருந்து வெளியேறு என, கடவுள் வந்து கூறினால் தான், தேர்தலில் இருந்து வெளியேறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

CATEGORIES
Share This