உலக அரசியலில் தமிழர் ஆளுமை வளர்ச்சி: இங்கிலாந்து புதிய பிரதமர் ஈழத் தமிழர் ஆதரவானவரா ?
ஐங்கரன் விக்கினேஸ்வரா
தற்போதய பிரித்தானியத் தேர்தல் தமிழ் பெண்ணின் வெற்றியானது, ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பெரும் பலமாக அமைய சாத்தியங்கள் என பல சிங்கள ஊடகங்கள் அச்சத்தை அள்ளித் தெரிவிக்கின்றன.
அதே வேளை உலக அரசியலில் அதிகரிக்கும் தமிழர்களின் செல்வாக்கால், பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழர்கள் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து ஓரணியில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.
தொழிற்கட்சியின் ஆதரவு நிலை?
இலங்கையில் சுயநிர்ணயம், அமைதி மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் செய்த தியாகங்களை நினைவுகூர வேண்டியது அவசியம் என தற்போதய புதிய பிரதமருமான கியர் ஸ்டார்மர் (Keir Starmer) கடந்த மே மாதம் தெரிவித்திருந்தார். பிரிட்டிஷ் தமிழர் பேரவை (BTF) ஏற்பாடு செய்திருந்த ட்ரஃபல்கர் சதுக்கத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில் அப்போதய தொழிற்கட்சியுன் தலைவரும், தற்போதய புதிய பிரதமருமான கியர் ஸ்டார்மர் (Keir Starmer) இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தமிழர் தாயகத்தில் உயிரிழந்த தமிழ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியைப் பெறுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஒரு சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் 2022 ஆம் ஆண்டில், தற்போதய புதிய பிரதமருமான கியர் ஸ்டார்மர் தமிழர்களுடன் ஆதரவாக நிற்கவும், அட்டூழியங்களைச் செய்த குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப ஐ.நா உயர் ஆணையரின் பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அனைத்து பாரிய அட்டூழியக் குற்றங்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்களின் குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
உண்மையான அமைதி மற்றும் நீதிக்கான தமிழ் மக்களுக்காக தொழிற் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் 2022 இல் கூறியிருந்தார்.
தொழிற் கட்சி பெரும்பான்மை:
நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைத்து 412 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளது.
பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 இடங்களிலும்
வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் தொழில் கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே பல கருத்துக் கணிப்புகள் முன்பு வெளியாகின. அதற்கேற்ப இந்த தேர்தலில் தொழில் கட்சி வெற்றிபெற்று 14 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி செய்திவந்து. பலமுறை கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியமை உள்ளிட்ட காரணங்களால் பிரதமர்களும் மாறினர்.
பிரதமராக இருந்த ரிஷி சுனக் மீது மக்கள் பெரும் எதிர்பார்ப்பை ஆரம்பத்தில் வைத்திருந்த போதிலும் பின்னர், அவரது செல்வாக்கு கடுமையாக சரிந்தது என கருத்துக் கணிப்புக்கள் முன்னரே தெரிவித்தன.
தமிழ் பெண் எம்.பியாக வெற்றி:
நடந்து முடிந்த தேர்தலில் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு இருந்தனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டியிட்டிருந்தனர்.
இவர்களுள் தொழிலாளர் கட்சியின் சார்பாக உமா குமாரன் (Uma Kumaran) போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானியாவில் தமிழர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தத் தேர்தலை உற்று நோக்கி வந்தனர்.
இந்நிலையில், 19,145 வாக்குகளை பெற்று உமா குமரன் பெரும் வெற்றியடைந்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்று சாதனையை உமா குமரன் படைத்துள்ளார்.
எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களையும் விட பல மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றுள்ள இவ்வரலாற்று சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக அரசியலில் தமிழர் ஆளுமை:
பிரித்தானிய தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றுள்ளமையால், அது இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளுக்கு வலுவாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பாரக்கின்றனர்.
அத்துடன் தொழில் கட்சி தமது தேர்தல் அறிக்கையில் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் முக்கிய அவதானம் செலுத்தியுள்ளது.
உலக அரங்கில் கனடாவின் அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறும் சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளது. கடந்தமுறை ஹரி ஆனந்த சங்கரி நாடாளுமன்றத்துக்கு தெரிவானதுடன், அமைச்சுப் பொறுப்புக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஓரளவு அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக உள்ளனர். இம்முறை அமெரிக்க தேர்தலிலும் சில தமிழர்கள் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதால் இவர்கள் அனைவரும் ஒரு பொது இணக்கப்பாட்டுடன் செயல்படும் தேவை எழுந்துள்ளது.
உலக அரசியலில் அதிகரிக்கும் தமிழர்களின் செல்வாக்கால்,
பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழர்கள் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து ஓரணியில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
தற்போதய பிரித்தானியத் தேர்தல் வெற்றி, ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பெரும் பலமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களும் மேற்கத்திய அரசியலில் செல்வாக்கும் செலுத்தும் நபர்களாக உள்ளனர்.
இவர்களும் ஈழத் தமிழர்களும் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களுக்கான பொது அரசியல் கோட்பாடுகளை வகுத்து செயல்படுவதன் மூலம் சர்வதேச ரீதியில் தமிழர் உரிமைக்கான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.