“தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்”: இலங்கை அரசாங்கத்திற்கு கனடாவில் கடும் எதிர்ப்பு
இலங்கை அரசாங்கத்திற்கு கனடாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கனடாவில் நிர்மானிக்கப்படும் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடர்பில் இலங்கையின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என பிரம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்திற்கு இலங்கையின் எதிர்ப்பைத் தெரிவித்து, இலங்கைத் தூதரக அதிகாரி துஷார ரொட்ரிகோ, நகர முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இலங்கையின் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், இலங்கையின் தீர்மானங்களை புறக்கணிக்க பிரம்டன் நகரசபை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக முதல்வர் பேட்ரிக் பிரவுன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில், தமிழ் சமூகம் தங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் மாவீரர்களை நினைவுகூருவதைத் தடுக்க அரசாங்கம் முயற்சி செய்யலாம். ஆனால் கனடாவில் அவர்களால் அதைச் செய்ய முடியாது.
கனடாவில் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்க முயல்வது உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் செயல்” என்று அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.