தமிழர்களுக்கு மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ள உமா குமரன்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழர்களுக்கு மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ள உமா குமரன்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

‘‘பிரிட்டனின் ’ஸ்ட்ராட்ஃபோர்ட் அன்ட் போ’ நாடாளுமன்றத் தொகுதியின் முதல் உறுப்பினரும், பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண்மணியுமாகிய உமா குமரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழர்களுக்குத் தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்’’ என கூறியுள்ளார்.

பிரித்தானிய பொது தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தொழிற்கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்து 14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கவுள்ளது.

தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இதன்மூலம் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் இலங்கையை விட்டு வெளியேறி ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சமடைந்த தம்பதியரின் மகள் உமா குமரன் பிரித்தானிய பாரளுமன்றிற்கு தெரிவாகியுள்ளார்.

லண்டனில் பிறந்து வளர்ந்த உமா குமரன் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவரின் பெற்றோர் இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் தொழிற்சங்கங்களுடன் ஆழ்ந்த தொடர்புகளைக் கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

1980களில் லண்டனுக்கு புலம்பெயர்ந்திருந்தனர்.

தொழிலாளர் கட்சியின் உறுப்பினரான உமா குமரன் 19,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது எதிர் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

உமா குமரன் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதல் தமிழ் எம்.பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This