தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு ஒத்திவைக்கப்படுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு ஆயத்தமாகிய நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி மாநாட்டை நடத்த விஜய் முடிவுசெய்துள்ளார்.
மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28ஆம் திகதி , விழுப்புரம் மாவட்ட பொலிஸ் அலுவலகம், மாவட்ட அரசாங்க அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் பொலிஸார அனுமதி வழங்கியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மாநாட்டை நடத்துவது குறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். செப்டம்பர் 23ஆம் திகதி குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய நேரத்தில் நடத்த முடியுமா என்றும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் விஜய் தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற 23ஆம் திகதி மாநாடு நடைபெறுமா? அல்லது மாநாடு திகதி தள்ளிவைக்கப்படுமா என த.வெ.க.வினர் மற்றும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.