வீரமுனை நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம்: இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

வீரமுனை நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம்: இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.

இது தவிர இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச சபையினால் சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (5) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதான நிகழ்வானது இனமுரண்பாட்டையும், இனவன்முறையினை ஏற்படுத்தும் என கடந்த வழக்கு தவணைகளில் சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (5) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்கள் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் குறித்த வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் 21 வரை வழக்கினை ஒத்திவைத்தார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் சட்டரீதியாக அனுமதி பெறாமல் வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு எனும் பெயரில் கோபுரம் ஒன்று அமைப்பதற்கு எதிராக இரண்டு நபர்களினால் முறைப்பாடு ஒன்று கடந்த மாதம் 14ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This