பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது; கோபத்தில் ரணில்
”ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தம்மால் தெரிவு செய்ய முடியாது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதி வேட்பாளரை முன்மொழிந்தால், வேட்பாளர் தொடர்பில் எதிர்பார்ப்பில் உள்ள ஏனையோர் தம்மீது அதிருப்தி அடையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி ஜனாதிபதி வேட்பாளர் தெரிவை பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவே மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் உயர்மட்டக் கூட்டத்தில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் அதிகாரத்தை மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் அந்தப் பணியையும் மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால், நேற்றைய தினம் தம்மால் வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாதென அறிவித்துள்ளார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் ரணிலும் மஹிந்தவும் நெருங்கிய நண்பர்களாகும். இதனால் தமது நண்பரின் ஊடாக பொதுஜன பெரமுனவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென ரணில் எண்ணியிருந்தார்.
வேட்பாளரை தெரிவுசெய்யும் பணி மஹிந்தவிடம் ஒப்படைக்கப்பட்டதால் தெளிதாக ஆளுங்கட்சியின் பொது வேட்பாளராக களமிறங்க முடியும் என ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டிருந்தார்.
இருவரும் விரைவில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவும் உத்தேசித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையிலேயே தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து மஹிந்த பின்வாங்கியுள்ளார். கட்சிக்குள் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக களமிறக்க வேண்டுமென்ற குரல் வலுப்பெற்று வருதால் மஹிந்த இந்த முடிவை எடுத்திருக்கலாமென அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.