“தெஹிவளை மிருகக்காட்சிசாலையை மூடுங்கள்“: சமூக வலைத்தளங்களில் ஆரம்பிக்கும் புரட்சி
அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் அரசராங்கம் முன்னெடுத்து வரும் சில திட்டங்களால் இலங்கையில் வளங்கள் பறிபோகின்றன. சில இடங்கள் பராமரிப்பின்றி அழிந்துவருவதையும் கண்கூட பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
அந்தவகையில், கடந்த சில நாட்களாக இலங்கையில் புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலையான கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பற்றிய பேச்சுக்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 3 ஆம் திகதியுடன் 88 ஆம் ஆண்டை பூர்த்திசெய்திருந்த நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் மிருகக்காட்சிசாலை பேசுபொருளாக மாறியுள்ளமையும் கவனிக்கத்தக்க விடயமாகும்.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் #Nomoredehiwalazoo #ShutdownDehiwelaZoo என்ற ஏஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகின்றது.
பிரபல ஒட்டாரா பௌண்டேசனனின் உரிமையாளர் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள் இது தொடர்பிலான கருத்துக்களுக்கு குரல் எழுப்பி வருகின்றனர்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.
அங்கு வாழும் மிருகங்கள் தனிமையாக இருப்பதோடு மிகவும் சோர்வாகவும் மனவுளைச்சலுடனும் இருக்கின்றன.
இதற்கு சரியான காரணம் என்ன என்பது தொடர்பில் சரியான விளக்கம் எதுவும் தெஹிவளை மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் இது வரை தெரிவிக்கவில்லை.
தெஹிவளை மிருகக்காட்சி சாலை வரலாறு
62 ஏக்கர் நிலப்பரப்பில் விசாலமான மிருகக்காட்சிசாலையானது 1920களில் ஜோன் கெகன்பேக் என்பவரால் முதலில் ஸ்தாபிக்கப்பட்டது.
1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. இதற்கான காரணம் இதன் தாபகர் ஒரு ஜேர்மன் நாட்டவர் என்பதனாலாகும். இந்த நிறுவனம் மூடப்படவுடன் இந்த நிறுவனத்தின் பல பகுதிகளை அரசுடமையாக்கி தெஹிவளை விலங்கியல் பூங்காவென அரசு மாற்றியது.
அதனைத் தொடர்ந்து 1939ஆம் ஆண்டு பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு உத்தியோகபூர்வமாக மக்கள் பார்வைக்கு அரசாங்கத்தால் திறந்து வைக்கப்பட்டது.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 220 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலங்கினங்கள் கண்காட்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது, சுமார் 352வகையான உயிரினங்கள் இருப்பாதாக ஒரு கணக்கெடுப்பை காட்டுகின்றது. ஆனால், இவ்வளவு உயிரினங்கள் அங்கு வாழ்வதாக நேரில் சென்று பார்த்தவர்களுக்கு தெரியும்.
மேலும், தனிமை காரணமாக பல மிருகங்கள் சோர்ந்து இருப்பது பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது. ஜோடிகள் இன்றி தனியாக இருப்பதால் உண்மையாகவே அவைகள் மனவுளைச்சலில் தான் வாழ்வதாக பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்த புகைப்படங்கள் காணொளிகள் அதற்கு சாட்சியங்களாகும்.
மேலும், தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, கூண்டுகளுக்குள் தனித்துவாழும் விலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காட்டுகிறது.
இதனடிப்படையில், 35 விலங்குகள் ஆண் துணை இன்றியும், 21 விலங்குகள் பெண் துணை இன்றியும் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியாக வாழ்வதும், தனிமையில் இருப்பதும் விலங்குகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.
விலங்கு நல உத்திகளின் நெறிமுறை அமைப்பின்படி, மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளின் இயல்பான நடத்தைக்குத் தேவையான சூழலை தயார் செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு சர்வதேச விலங்கு பரிமாற்ற திட்டங்களுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் தெரிவித்துள்ளது.
ஆனாலும், அரியவகை மிருங்கள் குறிப்பாக ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை என்பன அண்மையில் உயிரிழந்திருந்தது.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெஹிவளை மிருகக்காட்சிசாலை தொடர்பில் விசேட விதமாக கவனம் செலுத்த வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாகும்.
மேலும், அங்கு வாழும் அப்பாவி விலங்குகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவிதத்தில் அவைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே சமூக வலைத்தள விமர்சகர்களின் கணிவான வேண்டுகோளாகும்.
நாம் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தொலைபேசி மூலம் கேட்பதற்கு தொடர்புகொண்டபோதும் எம்மால் அனுகமுடியவில்லை என்பதும் கவலைக்குரியது.
அதையும் மீறி விலங்குகள் இவ்வாறு உணவு பற்றாக்குறை போன்ற விடயங்களால் துன்பத்துக்குள்ளாகுமாக இருந்தால், நிச்சியமாக தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு எதிராக கோசங்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நாம் நம்முடைய சுதந்திரத்திற்காக போராடுகின்றோம், சம்பளம் போதவில்லையா? போராடுகின்றோம், மது ஒழிக்க வேண்டுமா? போராடுகின்றோம், பெண்ணியம் பேச வேண்டும், என்று எல்லாம் பேசுகின்றோம், எப்படி பேசுகின்றோம்? வாய் இருக்கின்றது அதனால் நம்முடைய சுதந்திரம் வேண்டி பேசுகின்றோம். ஆனால் இந்த விலங்குகள் அதன் சுதந்திரத்தை வேண்டி எவ்வாறு பேசும் என்பதை சற்றே சிந்திப்போம்!!!