பிரித்தானியாவிற்காக செஸ் விளையாடப் போகும் ஒன்பது வயது தமிழ் சிறுமி

பிரித்தானியாவிற்காக செஸ் விளையாடப் போகும் ஒன்பது வயது தமிழ் சிறுமி

சர்வதேச அளவில் பிரிட்டன் நாட்டுக்காக விளையாட இருக்கும் இளம் வயது விளையாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் போதனா சிவானந்தன்.

வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவில் வசிக்கும் போதனா, ஹங்கேரியில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுத் தொடரில் பங்கேற்க இருக்கும் பிரிட்டன் பெண்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் இந்த அணியில் இணைவதற்கு முன்பு அணியில் இருந்த இளம் விளையாட்டு வீரான லான் யாவின் வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பிபிசியிடம் பேசிய போதனா, “நேற்று பள்ளியில் இருந்து திரும்பிய பின், இது பற்றி அப்பா என்னிடம் கூறினார்.

இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஒலிம்பியாடிலும் சிறப்பாக விளையாடி மேலும் ஒரு பட்டத்தை வெல்வேன்,” என்று கூறினார்.

பிரிட்டன் நாட்டில் செஸ்ஸில் சாதித்த இளம் வீரர்களில் போதனா மிகச் சிறந்த சாதனையாளர் என செஸ் அணியின் மேலாளர் மால்கம் பெய்ன் குறிப்பிட்டார்.

“இது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரிட்டனின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் நிச்சயம் வலம் வருவார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

போதனாவின் அப்பா சிவா, இது குறித்துப் பேசும்போது தன்னுடைய மகளுக்கு செஸ்ஸில் இத்தகைய ஆர்வம் எங்கிருந்து வந்தது என்பது புதிராகவே உள்ளது என்றார்.

“நானும் என் மனைவியும் பொறியாளர்கள். ஆனால் செஸ்ஸில் பெரிய அளவு நாட்டம் இல்லை,” என்று பிபிசியிடம் கூறிய அவர், இதற்கு முன்பு ஒரு சில முறை செஸ் விளையாட்டில் பங்கேற்றதாகவும் அதில் மிகவும் மோசமாக விளையாடியதாகவும் குறிப்பிடுகிறார்.

கொரானா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில்தான் போதனா முதல்முறையாக செஸ் விளையாட ஆரம்பித்துள்ளார்.

“என் அப்பாவின் நண்பர் இந்தியாவுக்குத் திரும்பும்போது அவருக்குச் சொந்தமான பொருட்களை எங்களிடம் கொடுத்துச் சென்றார்.

அதில் செஸ் போர்டும் இருந்தது. அப்போது இருந்துதான் நான் செஸ் விளையாடத் துவங்கினேன்,” என்று நினைவுகூர்கிறார் போதனா.

செஸ் விளையாடுவது கணிதம் கற்றுக் கொள்வதை எளிமையாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எட்டு வயதுக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான உலக சாம்பியன் போட்டிகளில் இருந்த மூன்று பிரிவுகளிலும் போதனா வெற்றி பெற்றார்.

சில மணிநேரங்கள் நீடிக்கும் க்ளாசிக் பிரிவு, ஒரு மணிநேரம் நீடிக்கும் ரேபிட் பிரிவு, மூன்று நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் ப்ளிட்ஸ் பிரிவு என மூன்று பிரிவுகளிலும் அவர் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

ஹங்கேரிக்கு செல்லும் போதனா அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பள்ளி முடித்து வீடு திரும்பியதும் தினமும் ஒரு மணிநேரம் இதற்கான பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறும் போதனா, வார இறுதி நாட்களில் செஸ் போட்டிகளில் பங்கேற்பதாகவும், போட்டிகள் நடக்காத நேரத்தில் ஒரு மணிநேரத்திற்கு மேல் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

பிரிட்டன் அணியில் வயதில் மூத்தவர்கள் அதிகம் இருந்தாலும், போதனா மட்டுமே வளர்ந்து வரும் இளம் வீரர் ஆவார்.

கொரோனா ஊரடங்கு, செஸ் விளையாட்டில் சாதிக்கும் பெண்ணின் வாழ்க்கையைச் சித்தகரிக்கும் வகையில் ‘நெட் ஃப்ளிக்ஸில்’ வெளியான ‘தி குயின்ஸ் காம்பிட்’ திரைப்படம் இது இரண்டும் இளம் தலைமுறையினர் மத்தியில் செஸ் பிரபலமாகியதற்கு காரணம் என்று குறிப்பிடுகிறார் பெய்ன்.

சர்வதேச செஸ் போட்டியில் மிக உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை போதனா நிச்சயமாக வெல்வார் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுகிறார் பெய்ன்.

கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளியான அபிமன்யூ மிஸ்ரா, அவருடைய 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற சாதனையை நிகழ்த்தினார்.

தற்போது போதனா, தன்னுடைய 10 வயதில், மிஸ்ராவின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.

இன்னும் ஒரே ஆண்டில், தன்னுடைய ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பு இந்தச் சாதனையை நிகழ்த்த தன்னைத் தயார்படுத்தி வருகிறார் போதனா.

CATEGORIES
Share This