பிரிட்டன் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார் இலங்கையைச் சேர்ந்த லூசியன் பெர்னாண்டோ !
பிரிட்டன் பொதுத்தேர்தல் ஜூலை 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் இலங்கையின் தலைநகர் கொழும்பைச் சேர்ந்த லூசியன் பெர்னாண்டோ Reform UK என்ற கட்சியில் போட்டியிடுகின்றார்.
லூசியன் பெர்னாண்டோ கொழும்பு புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் கல்வி கற்றவர், இவரின் வழிமரபினர் அனைவரும் பிரிட்டனில் அரசதுறைகளில் கடமையாற்றியுள்ளனர். இவருடைய தாத்தா, பூட்டனார் உள்ளிட்வர்கள் பிரிட்டன் கடற்படையில் கடமையாற்றியுள்ளனர். லூசியன் பெர்னாண்டோவும் பிரிட்டன் இராணுவத்தில் சுமார் நான்கரை வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
இதன் பின்னர் லூசியன் பெர்னாண்டோ பிரிட்டனுக்காகவும் அந்நாட்டு அரசாங்கத்திற்காகவும் மக்களுக்காகவும் பலதரப்பட்ட சேவைகளை புரிந்துள்ளார். மெட்ரோபொலிட்டன் பொலிஸிலும் முன்னாள் கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.
பிரிட்டன் பொதுத் தேர்தலில் Reform UK கட்சியில் போட்டியிடுவதற்கான முக்கிய காரணத்தை லூசியன் பெர்னாண்டோ கூறுகையில்,
தற்போது பிரிட்டனுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. பிரிட்டனில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் அனைவரையும் பாதித்துள்ளது. பிரிட்டனில் அனைவரும் சுமுகமானதொரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று அனைவரும் நினைப்பார்கள் ஆனால் இங்கு அப்படியல்ல. இங்கு சில சமயங்களில் சாதாரண வேலைகளில் ஈடுபடுபவர்கள் கூட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
ஒரு வேலை செய்பவர்களால் வாழ்க்கையை கொண்டுசெல்வதே பெரும் கஷ்டமான நிலையில் உள்ளனர். அவர்கள் மற்றுமொரு வேலையைத் தேடவேண்டிய நிலையில் உள்ளனர். அதனைவிட வேலைசெய்து ஓய்வுபெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோர் தமக்கு கிடைக்கும் ஓய்வவூதிய பணத்தில் வாழ்க்கையை கொண்டு செல்ல பெரும் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு உதவக்கூடிய புதிய பொறிமுறையொன்றை கொண்டுவரவேண்டும்.
பிரிட்டனைப் பொறுத்தவரையில் குடிவரவுத்துறை அத்துமீறிச் சென்று கொண்டிருக்கின்றது. இங்கு கடுமையான மனித உரிமை சட்டங்கள் உள்ளன. இந்த மனித உரிமைச் சட்டங்கள் இங்கு எழுதப்பட்டது 2 ஆம் உலகப் போர் காலத்தில், ஏனவே இந்த சட்டத்தை தற்போது கடைப்பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
பிரிட்டனுக்கு பெரும்பாலனவர்கள் படகுகளில் வந்து தஞ்சம் அல்லது அகதி அந்தஸ்து கோருகின்றனர். இவ்வாறு வருபவர்களை நிறுத்த முடியாமல் உள்ளது. பிரிட்டன் தனது கலாச்சாரத்தின் படி அகதிகளையும் புகலிடக் கோரிக்கையாளர்களையும் எப்போதும் வரவேற்றுள்ளது.
ஆனால் தற்போதைய நிலையில் பிரிட்டனுக்கு அவ்வாறு அவர்களை வரவேற்க முடியாத நிலைகாணப்படுகின்றது. என்ன காரணமென்றால் பிரிட்டன் தற்போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. பொதுச் சேவை பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளது. சனத்தொகை அதிகரிப்பு, பொலிஸாரால் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். சுகாதாரத் துறையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகள் பிரிட்டனை எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும்.
பிரிட்டனுக்கு வருவோருக்கு வழங்கப்படும் அகதி அந்தஸ்து மட்டுமல்ல, அவர்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பிரிட்டனிலேயே வழங்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் போது பிரிட்டனில் வாழும் மக்களுக்கு மேலும் சிக்கல்கள் உருவாகும். எனவே ஒரு கட்டுப்பாடான குடிவரவுத்துறை திட்டத்தை கொண்டுவர வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. வரி செலுத்தும் முறையில் மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு ஒப்பந்த அடிப்படையில் அமைந்துள்ளது. இவ்வாறான பல திட்டங்களையும் மறுசீரமைப்புக்களை பிரிட்டன் பொதுத் தேர்தலில் எமது கட்சியான Reform UK வெற்றிபெற்றால் நாம் அமுல்படுத்தி ஒரு மாற்றத்தை உருவாக்குவோம் என்றார்.