கோட்டாபயவுக்கு என்ன நடந்தது?; மீண்டும் ஒன்றுக்கூடிய ராஜபக்சர்கள்
இலங்கை அரசியலில் மன்னராட்சிக்கு பின்னர் பலம்வாய்ந்த குடும்ப அரசியல் நிலவிய காலமாக ராஜபக்சர்களின் ஆட்சிக்காலத்தை குறிப்பிடலாம்.
2005ஆம் ஆண்டுமுதல் 2015ஆம் ஆண்டுவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்களின் ஆதிக்கம் அரசின் அனைத்துத் துறைகளிலும் காணப்பட்டது.
மீண்டும் 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும் அவ்வாறான நிலைமையொன்றே உருவாகியிருந்தது.
ராஜபக்சர்கள் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிகளால் அவர்கள் தமது அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் கிளர்ச்சிகள் ஏற்பட்டிருக்காவிடின் இன்றும் ராஜபக்சர்களின் ஆட்சிதான் நிலவும்.
2022ஆம் ஆண்டு நாட்டில் மக்கள் கிளர்ச்சியால் கோட்டாபய ராஜபக்ச தமது ஜனாதிபதி பதவியை துறக்கும் நிலை ஏற்பட்டது. அவரது மோசமான நிர்வாகம் காரணமாகவே நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதுடன், ஏனைய ராஜபக்சர்களும் பதவிகளை துறக்க நேரிட்டது.
இதனால், ராஜபக்சர்கள் குடும்பத்திலும் பாரிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக பசில் ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும் பேசிக்கொள்வதில்லை என பல சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த மாதம் 15ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவின் 75 பிறந்த தின கொண்டாடத்தை ராஜபக்சர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடியுள்ளதாக தெரியவருகிறது. அதன் பின்னர் அனைவரும் பல்வேறு சமய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் ராஜபக்சர்கள் பொதுவெளியில் ஒன்றாக எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. என்றாலும், தற்போது இவர்களுக்குள் இருந்த கருத்து முரண்பாடுகள் நீங்கியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்சவுடன் கோட்டாபய ராஜபக்சவும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து வருவதாக தெரியவருகிறது.