கண்டி ,பேராதனை வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம்: நோயாளர்கள் சிரமத்தில்
கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் பேராதனை சிறுவர் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் லிக்னோகேன் (Lignocaine) என்ற தடுப்பூசிக்கு பல மாதங்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் மயக்க மருந்துகளில் பயன்படுத்தப்படும் அந்த தடுப்பூசி பற்றாக்குறையால் , கண்டி தேசிய வைத்தியசாலையில் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்வதில் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குறித்த லிக்னோகேன் தடுப்பூசி கிடைக்காததால் சிறு குழந்தைகளின் சத்திரசிகிச்சைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தடுப்பு மருந்து தட்டுப்பாடு குறித்து வைத்தியசாலைகளின் கட்டுப்பாட்டு அதிகாரசபை கொழும்பு சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ள போதிலும், தடுப்பூசி விநியோகம் இதுவரையில் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வப்போது சில மருந்துகளில் தட்டுப்பாடு நிலவினாலும் கூட அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் அவசர கொள்வனவுகளின் கீழ் பெற்று நோயாளரின் சிகிச்சைகளை வழங்குவதாக கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளின் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் அந்த வைத்தியசாலைகளின் சிரேஷ்ட பேச்சாளர்கள் இருவர் தெரிவித்தனர்.
குறித்த லிக்னோகேன் வகையான மயக்க மருந்துகளும் அவ்வப்போது அவசரகால கொள்வனவுகளின் கீழ் பெறப்படுவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.