பண்டாரநாயக்காவைப் போன்று தன்னை கொலை செய்யத் திட்டம் என்கிறார் மைத்திரி: விஜயதாச ஜனாதிபதி வேட்பாளர் என்பதிலும் உறுதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்கவை அன்று சுட்டுக் கொலை செய்ததாகவும் இன்று அதே குழுவினர் தன்னை கொல்லாமல் கொல்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலம்புகிறார்.
கர்தினால் மற்றும் அரசியல் குழுக்கள் மூலம் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதேவேளை ஹர்ஷ டி சில்வா தனக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை சபாநாயகரிடம் முன்வைத்திருந்தார்.
இப் பின்னணியிலேயே மைத்திரிபால சிறிசேனவும் தன் மீதும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறுவதாகத் தெரிகின்றது.
கண்டி ஈ.எல். சேனாநாயக்க சிறுவர் நூலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சந்திப்பிலேயே மைத்திரிபால சிறிசேன இது பற்றி பிரஸ்தாபித்திருந்தார்.
அங்கு மேலும், விளக்கமளித்த மைத்திரிபால சிறிசேன,
”தற்போது சுமார் ஐந்து வருடங்களாக என்னைக் கொல்லாமல் கொல்ல அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொள்ள நான் குண்டுகளை தயாரித்தேனா? அதற்கு தொடர்புடைய 160க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போது சிறைச்சாலையில் இருக்கின்றனர். கர்தினால் அல்லது அரசியல்வாதிகள் , ஊடகங்கள் இவை தொடர்பில் பேசுகின்றனவா?
இன்று எங்களுக்கு ஒவ்வொரு அரசியல் பைத்தியக்காரர்களும் ஏராளமான விடயங்களை கூறி வருகின்றனர். இன்னும் இரு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்திய பின்னர் இந்த சத்தங்கள் எல்லாம் நின்று விடும். கூச்சலிடுபவர்கள் சரியான பாடத்தை கற்றதன் பின்னரே அதனை நிறுத்துவார்கள்.
வேலி அடைத்து வாய்களை மூட முடியாது. அதனால் இந்த இரு மாதத்திற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.
கட்சியின் பதவிகள் தொடர்பில் தற்போது தடை உத்தரவுகள் மாத்திரமே பிறப்பிக்கப்பட்டுள்ளன.அது தொடர்பில் நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் இன்னும் வழங்கவில்லை. இறுதியில் யார சரி என்பது தீர்மானிக்கப்படும்.” என தெரிவித்தார்.
மேலும், கட்சி சார்பில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் விஜயதாச ராஜபக்ச முன்னிலைப்படுத்தப்படுவார் என மைத்திரபால சிறிசேன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.