மொராகலையில் உண்மை, நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலக கூட்டம்
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM), 1983ஆம் ஆண்ட முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான மோதலின் காரணமாக ஏற்பட்டுள்ள சமூக சவால்கள் மற்றும் அவதானிப்புகளை சேகரித்து அதற்கான தீர்வுகளை கண்டறியும் நோக்கத்துடன் கடந்த 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி மொனராகலை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருடனான சந்திப்புகளை நடத்தியிருந்தது.
அந்த காலப்பகுதியில், உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலக பணிக்குழுவினர் மொனராகலை மாவட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அடையாளம் காண்பதற்காக பல்தரப்பட்ட தரப்பினருடன் 12 சந்திப்புகளை நடத்தினர்.
இந்த குழுவின் ஜூன் 05ஆம் திகதி மொனராகலை மாவட்ட செயலாளர் ஆர். எம். பி. எஸ். பி. ரத்நாயக்கவுடனான சந்திப்பில், உத்தேச “உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம்” மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பங்கு குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்ட எத்திமலே, ஒக்கம்பிட்டிய, மஹகொடயாய ஆகிய கிராம மக்களுடன் அந்தந்த பிரதேச செயலகங்களில் பல சந்திப்புகள் இடம்பெற்றதுடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஜூன் 7 ஆம் ஆம் திகதி, அப்பிரதேச செய்தியாளர்களுக்காக நடத்தப்பட்ட சந்திப்பில் இடைக்கால செயலகத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
மேலும்,மொனராகலை பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், மாகாண சபை முதல்வர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்தள இராணுவ போர் பயிற்சிக் கல்லூரியின் இராணுவ அதிகாரிகள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடமிருந்தும் மேற்குறிப்பிட்ட உத்தேச சட்டத்திற்கு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் 8ஆம் திகதி இந்த குழுவினர் ஹம்பேகமுவ தோட்ட மக்களையும் முஸ்லிம் மக்களையும் சந்தித்தனர்.
இதன்போது, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராசா மற்றும் ஆசிப் போர்ட், இணைப்பாளர் சரத் கொத்தலாவல, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி (சட்டங்கள்) வை.எல். லொக்குநாரங்கொட, நிறைவேற்று அதிகாரி (பொது உறவுகள்) சௌமியா விக்ரமசிங்க மற்றும் இடைக்கால செயலக அதிகாரிகளும் இந்த சந்திப்புக்களில் கலந்து கொண்டனர்.