சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட ஹிருணிகா : மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் தகவல்

சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட ஹிருணிகா : மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் தகவல்

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, வைத்திய அறிக்கை பெற்றுக்கொள்வதற்காக சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையின் ஆர் வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஏனைய கைதிகளுடனேயே அந்த வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக நேற்று (28) கைதிகளுக்கு விதிக்கப்பட்ட உடைகள் அவருக்கு வழங்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரை கடத்திச் சென்று சாதாரணமற்ற முறையில் அடைத்து வைத்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அறிவித்துள்ளார்

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியான நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20,000 ரூபா அபராதம் விதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒரு குற்றச்சாட்டிற்கு 06 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This