ஜனாதிபதியாக கூடுதல் வழக்குகளை சந்தித்தேன் – மைத்திரி: கின்னஸ் சாதனை என்கிறார்

ஜனாதிபதியாக கூடுதல் வழக்குகளை சந்தித்தேன் – மைத்திரி: கின்னஸ் சாதனை என்கிறார்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணங்களுக்காக வழங்கப்பட்ட பணம் மற்றும் நிதி உதவிகள் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மூலம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

ரஞ்சித் ஆண்டகையின் வலியுறுத்தல் காரணமாகவே தமக்கு எதிரான பல நீதிமன்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எனக்கு எதிராக நீதிமன்றத்தில் 400 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

நான் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளேன்.

கர்தினாலின் ஆலோசனையின் பேரிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஒரு வழக்கு உயிரிழந்தவர்களுக்கானது , மற்றையது காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நான் ஜனாதிபதியாக இருந்தபோது அனைவருக்கும் தெளிவாக இழப்பீடு வழங்கப்பட்டது.” எனத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், கத்தோலிக்க அமைப்புகள், உலக நாடுகள், இலங்கையில் உள்ள உயர்மட்ட வர்த்தகர்கள் மற்றும் பல தரப்பினரிடம் இருந்து கர்தினால் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது? என மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பணத்தைப் பெற்றவர்களின் பெயர்கள், இந்த பணத்திற்கு என்ன ஆனது என்பது பற்றி கர்தினால் ஒரு பட்டியலை முன்வைத்தால் நல்லது என வலியுறுத்தியுள்ளார்.

அதில் ஒரு சதம் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

”நான் ஜனாதிபதியாக இருந்த போது அரசாங்கத்தினால் பணம் வழங்கப்பட்டது, ஆனால் தற்போது சொந்தமாக நட்டஈடு வழங்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுதான் தற்போதைய நிலை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This