மக்கா வெப்ப அலை: பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு!

மக்கா வெப்ப அலை: பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு!

கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 900க்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், அதில் 80க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஆண்டுதோறும் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 14ம் திகதி தொடங்கிய இந்த புனித யாத்திரைக்காக இதுவரை அங்கு 20 இலட்சம் பேர் திரண்டுள்ளனர்.

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வரும் சூழலில், யாத்திரை வந்தவர்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து மயங்கி வருகின்றனர்.
அவ்வாறு விழுந்தவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் அங்கு பதிவாகி வருகின்றன. இந்நிலையில், கடும் வெப்பத்தால் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பலியானவர்களில் 600 பேர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், அந்நாட்டில் இருந்து வந்து மாயமான 1,000க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருகிறது.

வெப்பம் தாங்காமல் இதுவரை இந்தியர்கள் 80 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், ஜோர்டான், இந்தோனேஷியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் குர்திஸ்தான் ஆகிய நாடுகளும், தங்கள் நாட்டவர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளன.
இருப்பினும், தற்போது வரை சவுதி அரேபியா அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இறந்தவர்களின் உடல்கள், மெக்காவுக்கு அருகில் உள்ள அல் – மொயிசம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு, அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

ஹஜ் புனித யாத்திரைக்கு முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை சவுதி அரசு செய்கிறது.

அவ்வாறு பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாததாலும் அதிகம் பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

CATEGORIES
Share This