கிழக்கில் எம்.பி.க்களின் உயிர்களுக்கு ஆபத்து
கிழக்கில் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் திரிப்போலி படையணி குழுவினர் தொடர்பான தகவல்களை வெளியிடுகின்ற போதும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இது மக்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது சாணக்கியன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 14ஆம் திகதி சித்திக் சிபானி என்ற பெண்ணை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருந்து அந்தப் பெண் தப்பியுள்ள நிலையில், துப்பாக்கியால் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். கடந்த ஒருவருட காலத்தில் திரிப்போலி படையணி என்ற குழு தொடர்பிலும் அவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் இந்தக் குழு லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட மற்றும் ஜொசப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகளுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ள முறை தொடர்பிலும் அடிக்கடி இந்த பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2008ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி அலுவலத்திற்கு பொறுப்பான இருந்த சாந்தன் என்பவரை 21 தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தி கொல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடையவர்கள் என்று ஹமீத் லெப்பை மொஹமது சயிட், பொலிஸ் பாயிஸ் மற்றும் குகன் என்ற நபர்கள் தொடர்பில் இந்த சபையில் குறிப்பிட்டிருந்தேன். அதன்போது குகன் என்ற நபரின் அடையாள அட்டை எண்ணையும் குறிப்பிட்டிருந்தேன். அந்த நபர் இப்போது ஹுசைன் என்ற முஸ்லிம் பெயரில் இருக்கின்றார் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதன்பின்னர் அந்த நபர் மனித உரிமைகள் பேரவை, ஐநா போன்ற இடங்களுக்கு சென்று சாந்தன் மீதான துப்பாக்கிச் சூட்டுடன் தான் தொடர்புபடவில்லை என்றும், அதனுடன் பொலிஸ் பாயிஸ் என்பவரும் ஹமீத் லெப்பை என்பவருமே தொடர்புபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி சித்திக் சிபானி என்ற பெண் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் மொஹமட் சயிட் என்பரே தற்போது கைதாகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை கைது செய்ய செல்லும் போது இரும்புத் தடியால் அவரின் தலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நபர் காத்தான்குடியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கொலை செய்தவர். இந்த குழு புலனாய்வு பிரிவினருடன் செயற்பட்ட குழுவாகும்.
இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் கூறுவது தொடர்பில் கவனம் செலுத்தாது அரசாங்கம் இருக்கப் போகின்றது. மக்களை இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஆபத்தில் தள்ளப் போகின்றீர்கள். புலனாய்வு தரப்பினருடன் தொடர்புபட்ட குழுக்களை பாதுகாப்பதற்காக இந்தக் குழுக்கள் இன்னும் கொலைகளை செய்யும் வரையில் பார்த்துக்கொண்டிருக்கப் போகின்றீர்களா? பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் ஆபத்திலேயே இருக்கின்றது.
மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புடைய குழுவினரே இவர்கள். இவர்கள் அப்போது பயன்படுத்திய துப்பாக்கிகளும் இப்போது பயன்படுத்தும் துப்பாக்கிகளும் ஒன்றா என்றும் தெரியாது. இது பாரதூரமான பிரச்சினையாகும். நாங்கள் இந்தளவு தகவல்களை வெளியிட்டும் இதுவரையில் ஏன் விசாரணைகள் நடத்தப்படுவதில்லை.
அத்துடன் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கொலைகளுடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பில் காத்தான்குடியிலுள்ள மொஹமட் தம்பி உவைஸ் என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழு உள்ளிட்ட பல இடங்களில் தகவல்களை வழங்கியுள்ளார். அவரின் பாதுகாப்பு வலையமைப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் குறித்த குழு தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இதனால் இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த சபையில் வலியுறுத்துகின்றோம் என்றார்.