உத்தேச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!; டெல்லி சந்திப்பில் மோடி ரணிலிடம் தெரிவிப்பு

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!; டெல்லி சந்திப்பில் மோடி ரணிலிடம் தெரிவிப்பு

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலின் பின்னர் டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். டெல்லி – ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின் பின்னர் அனைத்து நாட்டு தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இதன்போது இலங்கையில் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சம்பாஷனை இடம்பெற்றது. இதன்போது பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

அங்கு பிரதமர் மோடி மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் இந்த வருடம் இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நீங்கள் எதிர்கொள்ள உள்ளீர்கள்தானே. அதில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். குறுகிய கால அழைப்பில் எனது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றமையானது பெரும் ஊக்கத்தை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மன்னர் ஆட்சிக்காலம் தொடக்கம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருந்துள்ளன. இலங்கை மன்னர்கள் பலர் இந்தியாவுக்கு விஜயம் செய்து மன்னர்களின் முடிசூட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த நெருக்கமான உறவுகள் இன்றும் வலுவாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தேர்தலில் வெற்றி பெற எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். தேர்தலின் பின்னர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வாழ்த்துக்களை கூறி பிரதமர் மோடி வழியனுப்பிவைத்தார்.

CATEGORIES
Share This