மஹிந்தவின் அலை ஆரம்பித்த அதே இடத்தில் தேசியவாதிகளின் முதல் கூட்டம்: 69 இலட்சம் வாக்காளர்களுக்கு அழைப்பு
எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்கிழமை “சர்வஜன அதிகாரம்“ கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நுகேகொடையில் நடைபெறவுள்ளது என அக்கூட்டணி அறிவித்துள்ளது.
கடந்த 2019இல் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரில் ஒருவராக நீங்கள் இருந்தால் எதிர்வரும் 18ஆம் திகதி நுகேகொடைக்கு வருமாறு சர்வஜன அதிகாரத்தின் பல செயற்குழு உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
69 இலட்சம் பேரின் உதவியுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த சிலர் அதிகாரத்தை பெறுவதற்காக பல்வேறு இடங்களுக்கு தாவினாலும், பெரும்பான்மையான மக்கள் என மௌனம் காத்து வருகின்றனர்.
சந்தர்ப்பவாதிகள் எங்கு குதித்தாலும் மக்கள் அவர்களை அவதானித்து வருகின்றதாகவும் கூறினார்.
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவும் 69 இலட்சம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தொடர்ந்தும் நிற்போம். அதற்கான ஒரே அரசியல் சக்தி நாமே என்றும் அவர் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தேசிய அபிலாஷைகளை காட்டிக்கொடுக்கின்றனர் என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் 13வது திருத்தம் குறித்து பேசி தமிழ் மக்களை ஏமாற்ற முயல்வதாக குற்றம் சுமத்தினார்.
மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, உப தலைவர் அனுராதா யஹம்பத், பிவித்துரு ஹெல உறும்ய தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரசிங்க, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு தரப்பினர் சர்வஜன அதிகாரம் கூட்டணியில் கைகோர்த்துள்ளனர். இவர்கன் தேசியவாதத்தை முன்னிறுத்தி அரசியலை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவருவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் முதல் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உட்பட பல்வேறு நபர்களால் முதல் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் கூட்டமும் நுகேகொடையில்தான் ஆரம்பமானது.
அதன் பின்னர் இலங்கை முழுவதும் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பெற்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.