தேர்தல் – அதிகரிக்கும் இரட்டை நிலைப்பாடுகளும் மனட்சாட்சியும்: மூன்றாகப் பிளவுபட்டிருக்கும் சுதந்திரக் கட்சி
தான் அமைச்சரவையில் இல்லையென்றால் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்ற ஒன்று இருக்காது என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
விசேட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விஜயதாச ராஜபக்சவுக்கான ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த விஜயதாச,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவின்றி எவரேனும் ஜனாதிபதியாவது சாத்தியமற்றது. எதிர்காலத்தில் அனைத்து விடயங்களும் வெளிவரும்.
இது மிகவும் சிறப்பான தேர்தல் நாட்டின் எதிர்காலம் இந்த தேர்தலின் மூலம் தீர்மானிக்கப்படும்.
தான் ஜனதிபதியாவது, மிஹிந்து தேரர் தேவனாம்பியதிஸ்ஸ மன்னருக்கு வழங்கிய அறிவுரையை பின்பற்றி, நாட்டின் உரிமையாளராக இல்லாது பாதுகாவலராக இருப்பதற்கு என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மூன்றாகப் பிளவுப் பட்டிருக்கும் சுதந்திரக் கட்சி
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது பெரும் கேள்விக்குறியாகவும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தினார்.
சுதந்திரக் கட்சியின் பலரது ஆதரவு உள்ளதாகவும் அவர்களை இணைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவே எதிர்பார்ப்பதாக தேசிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
மறுபுறம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த மாதம் 31 ஆம் திகதி மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினால் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டப்பூர்வமான பொதுச்செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ரணில் விக்ரமசிங்கவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதாக வெளியாகிய அறிக்கையை நிராகரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுக்கட்டாயமாக கைப்பற்றி வைத்துள்ள அமைச்சர் நிமல் சிறிபால, ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் ஆதரவை அறிவித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட சிலருக்கு சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்த சட்டப்பூர்வ உரிமை இல்லை எனவும் கட்சியின் சட்டபூர்வமான செயலாளர் என்ற வகையில் கட்சியை அரசாங்கத்துடன் இணைக்கும் இந்த முயற்சிகளை தான் கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
கட்சியின் உறுப்பினர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த சில நாட்களாக பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
அரசியல் பிரமுகர்களிடையேயான கட்சித் தாவல்கள், நிலையற்ற தீர்மானம், ஒரே கட்சிக்குள் பல பிரிவுகள் போன்றன, மக்களையும் குழப்பமடையச் செய்கின்றன.
கட்சிகளைக் கடந்து தனிநபா் ஆதரவுகளும் இத் தேர்தலில் விஞ்சிக் காணப்படுகின்றன.