நடிகை கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண்: விமான நிலையத்தில் பரபரப்பு
சண்டிகர் விமான நிலைய பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் நடிகை கங்கனா ரனாவத்தை அறைந்த காணொளிகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில், டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கங்கனாவை தாக்கியது ஏன்?
நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்க வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து பேசியிருக்கும் காவலர் குல்விந்தர் கவுர், “100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கங்கனாவை கன்னத்தில் அறைந்த காவலரான குல்விந்தர் கவுர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர் குல்விந்தர் கவுரை பொறுத்தவரை அவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கனா ரணாவத் சொன்னது என்ன?
கடந்த 2020-ம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பிட்ட ஒரு போராட்டத்தை மேற்கொள்காட்டி அதிலிருக்கும் மூத்த விவசாய பெண்ணை குறிப்பிட்டு நடிகை கங்கனா தனது எக்ஸ் தள பக்கத்தில், “100 ரூபாய்க்காக அவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்” என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதனை தனது எக்ஸ் தள பக்கத்திலிருந்து கங்கனா நீக்கிவிட்டார்.