மோடியின் பதவியேற்பு திகதியில் மாற்றம்: புதுடில்லி செல்லும் ரணில் முக்கிய பேச்சுகளில் ஈடுபடுவார்

மோடியின் பதவியேற்பு திகதியில் மாற்றம்: புதுடில்லி செல்லும் ரணில் முக்கிய பேச்சுகளில் ஈடுபடுவார்

இந்திய மக்களவை தேர்தலில் 293 இடங்களை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைக்க அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு தீவிரம்

மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது.

பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் கூட்டணி ஆட்சியே அமைக்கிறது. பாஜகவின் 14 கூட்டணி கட்சிகளிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். தெலுங்கு தேசத்திடம் 16, ஐக்கிய ஜனதா தளத்திடம் 12 எம்.பி.க்கள் உள்ளனர்.

ஜூன் 9ஆம் திகதி மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.

உலகத் தலைவர்கள் வாழ்த்து

பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசண்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், பூடான் பிரதமர் தாஷோஷெரிங் டோப்கே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014இல் பிரதமர் மோடி முதல்முறையாக பதவியேற்ற போது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விழாவில் பங்கேற்றார்.

புல்வாமா தாக்குதல் காரணமாக இரு நாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதனால், கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல, இம்முறையும் அழைப்பு விடுக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மோடியை இலங்கை வருமாறு அழைப்பார் ரணில்

இந்த நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாளை மறுதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய தலைநகர் புதுடில்லிக்குச் செல்ல உள்ளார்.

பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடி உட்பட பாஜக அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த காலத்தில் இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகள் மற்றும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் முன்னெடுக்கவிருந்த திட்டங்களை விரைவுப்படுத்தும் கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க மோடியிடம் முன்வைக்க உள்ளார்.

குறிப்பாக இருநாடுகளுக்கு இடையில் நிலத் தொடர்பை உருவாக்கும் பாலத்தை அமைக்கும் திட்டத்தை விரைவுப்படுத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க மோடியிடம் கலந்துரையாட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று மோடியை இலங்கைக்கு வருமாறு ரணில் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது

CATEGORIES
Share This