புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி; யாழில் கைதான போலி வைத்தியர்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் , கைது செய்யப்பட்ட வேளை ,காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள் , 05 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் ,போலியான வைத்தியர்களுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து தன்னை வைத்தியராக அறிமுகப்படுத்தி, ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக கூறி புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் தமிழர்களை ஏமாற்றி, பெரும் தொகையான பணத்தினை பெற்று யாழ்ப்பாணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் யாழ்.நகர் பகுதியில் உள்ள தனது காணியொன்றினை ஒரு கோடியே 42 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வுள்ளதாக கூறி போலியான உறுதி உள்ளிட்ட போலி ஆவணங்களை அனுப்பி, கனடா வாசியிடம் இருந்து ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை சட்டவிரோதமான முறையில் (உண்டியல் மூலம்) பெற்றுள்ளார்.
சில தினங்களின் பின்னரே தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கனடாவை சேர்ந்தவருக்கு தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , மோசடியில் ஈடுபட்ட நபர் , போலியாக தன்னை ஒரு மருத்துவர் என கூறி புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நபர்கள் பலரிடம் பல ஆண்டு காலமாக இலவச மருத்துவ முகாம்களுக்கு என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காருடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.