தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை – சஜித், அனுர ஆதரவா?: சர்ச்சைக் கருத்துக்கு விளக்கம் கூறும் பாலித

தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை – சஜித், அனுர ஆதரவா?: சர்ச்சைக் கருத்துக்கு விளக்கம் கூறும் பாலித

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைத்தல் மற்றும் தேவையேற்படின் சர்வஜன வாக்கெடுப்தை நடாத்தல் தொடர்பான தனது யோசனை அரசியலமைப்பிற்கு அமைவானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை விளக்கப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள்‌ மேற்கொள்ளப்பட வேண்டுமென பாலித ரங்கே பண்டார கடந்த 28 ஆம் திகதி கூறியதையடுத்து இந்த கருத்து பேசுபொருளாக மாறியது.

இவரது இந்த கருத்து தொடர்பில் அரசியல் கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் கருத்தை ஆழமாக ஆராயாமல் இவ்வாறு அறிவிப்புகளை விடுப்பது சிறுபிள்ளைத்தனமானது என

ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்று பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்திருந்தார்.

மேலும் மேலும் கடந்த மாதம் 30 ஆம் திகதியன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாலித ரங்கே பண்டார தனது கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதாக கூறியிருந்தார்.

இதற்கமைய தனது கருத்து தொடர்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இறையாண்மையை கைவிட முடியாது

“இலங்கை குடியரசின் இறையாண்மை மக்களிடமே உள்ளது.இறையாண்மையை கைவிட முடியாது.இதில் நிர்வாக அதிகாரம், வாக்களிக்கும் உரிமையும் அடங்குகின்றது.

முதலாவது அத்தியாயத்தின் இலக்கம் 04 அ அரசியலமைப்பு பிரிவில் இறையாண்மைப்படுத்தப்படுவதன் சட்டத்தன்மை குறிப்பிடப்பட்டுள்ளது.

13 வது அத்தியாயத்தின் 86 ஆவது சரத்துக்கமைய ஜனாதிபதியின் அபிலாஷைக்கமைய தேசிய முக்கியத்துவம் மிக்கதாக ஜனாதிபதி கருதுகின்ற ஏதேனும் காரணத்திற்காக 85 ஆவது அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கமைய ஜனாதிபதியால் சர்வஜன வாக்கெடுப்புக்காக அதனை மக்களிடம் முன்வைக்க முடியும்அத்துடன் அரசியலமைப்பின் 87 (1), 87 (2) பிரிவுகளிலும் இது தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு

அ பிரிவில் மக்களது நாடாளுமன்ற அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தாலும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மக்களாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 86ஆவது சரத்தின்படி ஜனாதிபதியின் கருத்திற்கமைய தேசிய முக்கியத்துவம் மிக்கதாக அவர் கருதும் ஏதேனும் காரணத்திற்காக 85 ஆவது அரசியலமைப்பு பிரிவின் விதிமுறைகளுக்கமைய ஜனாதிபதியால் சர்வஜன வாக்கெடுப்புக்காக அதனை மக்களிடம் முன்வைக்க முடியும்.

87 (1) பிரிவிற்கமைய எந்தவொரு சர்வஜன வாக்கெடுப்பு தேர்தல்கள் ஆணையாளரால் நடாத்தப்படுவதுடன் பெறுபேறுகள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும்.

87 (2) பிரிவிற்கமைய சர்வஜன வாக்கெடுப்பால் சட்டமூலங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் வாக்கெடுப்பிற்கு செல்லும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தொடர்பில் தவறுகள் இடம்பெறும் பட்சத்தில் செயற்பட வேண்டிய விதம் மற்றும் தண்டனைகள் விதிக்கப்படும் போது செயற்பட வேண்டிய விதம் உள்ளிட்டவை தொடர்பிலும் நாடாளுமன்றத்தினால் சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் அதன் போதான நாடாளுமன்றத்தின் வகிபாகம் தொடர்பிலேயே கூறினேன். அவை அரசியலமைப்பிற்கோ ஜனாநாயகத்திற்கோ முரணானவை அல்ல.

எதிர்கட்சிகள் இணக்கம்?

எனது யோசனை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிடம் கூறினேன்.

இதற்கு அவர்களும் இருவருமே எதுவித எதிர்ப்புக்களையும் தற்போது வரை வெளியிட்டிருக்கவில்லை” என அவர் தெளிவுப்படுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This