ரணிலுக்கு வலுப்பெறும் ஆதரவு: பதவிக்காலம் தொடருமா?

ரணிலுக்கு வலுப்பெறும் ஆதரவு: பதவிக்காலம் தொடருமா?

உலக நாடுகளுக்கு தேர்தல் ஆண்டாகக் கருதப்படும் 2024ஆம் ஆண்டு , இலங்கைப் பிரஜைகளுக்கும் தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது.

தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைவதால் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார , தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்.‘ என தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கையின் மூலம் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதுடன், இது ஜனநாயக விரோத அறிக்கை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்கள் வாக்குகளை வழங்குவதற்கு இலங்கை மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் சம நிலையில் காணப்படுவார்கள் என சுகாதார கொள்கை நிறுவகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதன்படி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு 39 வீதமான மக்கள் அங்கீகாரம் கிடைக்கும்.

எனினும் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, அனுரகுமார திஸாநாயக்கவிற்கான விருப்பு 6 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மக்களின் ஆதரவு தலா 1 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இது தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 9 வீதமான மக்கள் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், ‘அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மட்டுமே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும் எனவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. ‘ எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

CATEGORIES
Share This