பொதுத் தேர்தலில் ராஜபக்சர்கள் எவரும் போட்டியிடவில்லை; சிரேஷ்ட அரசியல்வாதிகளும் பின்வாங்கினர்
பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த இரண்டு தசாப்தங்களாக நாடாளுமன்றத்திலும், நாட்டின் ஆட்சி அதிகாரத்திலும் செல்வாக்குச் செலுத்திய ராஜபக்சர்கள் எவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளனர்.
அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன உட்பட கடந்த அரசாங்கத்தில் சிரேஷ்ட அரசியல்வாதிகளாக செயல்பட்ட பலரும் தேர்தலில் போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்தது. இம்முறை 101 அரசியல் கட்சிகளும், 349 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
பிரதான அரசியல் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுவதுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.
அதேபோன்று வடக்கின் தமிழ் கட்சிகள் கூட்டணிகளாகவும் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சித் தலைமையில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை சிதறிப்போயுள்ளதுடன், தமிழரசுக் கட்சி தனித்து வடக்கு, கிழக்கில் போட்டியிடுகிறது.
மலையகத்தில் இ.தொ.கா ஐ.தே.கவின் யானை சின்னத்திலும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியிலும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டின் ஆட்சி அதிகாரத்திலும், நாடாளுமன்றத்திலும் செல்வாக்குச் செலுத்திய ராஜபக்சர்கள் எவரும் இம்முறை போட்டியிடவில்லை.
நாமல் ராஜபக்ச, பொதுத் தேர்தலில் போட்டியிடவிருந்த போதிலும், ஜனாதிபதித் தேர்தலில் அவரது மாவட்டமான அம்பாந்தோட்டையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அவர் கடுமையான பின்னடைவை சந்தித்தால் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாதென வழங்கப்பட்ட ஆலோசனைகளின் பிரகாரம் அவரும் பின்வாங்கியுள்ளார். என்றாலும், அவரை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப அக்கட்சி தீர்மானித்துள்ளது.
அதேபோன்று கடந்த நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களாக செயல்பட்ட ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, ஜோன் செனவிரட்ன, சம்பிக்க ரணவக்க, பந்துல குணவர்தன, விமல் வீரவங்ச, செஹான் சேமசிங்க, டளஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, லக்ஷ்மன் கிரியெல்ல, அலி சப்ரி, காமினி லெகுகே, சி.வி.விக்னேஸ்வரன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்களநாதன் உட்பட பலர் தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்திக்கான அலை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பலர் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளனர். அதன் பிரகாரம் கடந்த மூன்று தசாப்தமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பலர் இம்முறை அமையும் நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள் அரசியல் கட்சிகளின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.